தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 236 -

சீதக்காதி என்ற புகழ்பெற்ற அந்த வள்ளலுக்கு நீண்ட நாளாக ஓர் ஆசை இருந்தது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் இஸ்லாமியக் கருத்துகளைப் படித்து அறிவதற்குத் தமிழ் நூல் இல்லையே, அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார். இஸ்லாமியச் சமயக் கருத்துகளையும் முகமது நபியின் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்காக அரபுமொழியைப் படிக்கவேண்டியிருந்தது. தமிழில் ஒரு நூல் இருந்தால் முஸ்லிம் தமிழர் பலரும் அதை எளிதில் படித்து அறிந்துகொள்ள வாய்ப்பாகும் என்று அதற்காக முயன்று வந்தார். அரபுமொழியில் நல்லபயிற்சி உடைய தமிழர் ஒருவர் இருந்தார். ஆனால் தமிழில் புலமையும் செய்யுள் இயற்றும் திறமையும் உடைய முஸ்லிம் புலவர் ஒருவர் கிடைக்கவில்லை. உமறுப் புலவர் என்ற முஸ்லிம் புலவர் வேறு இடத்தில் அரசவைப் புலவராக இருப்பது அறிந்தார். அவரை வரவழைத்துத் தம் வேண்டுகோளைத் தெரிவித்தார். உமறுப்புலவர் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். இனிய செந்தமிழ்ப் பாடல்களால் சீறாப்புராணம் பாடத் தொடங்கினார். நூல் முற்றுப் பெறுவதற்கு முன்னமே வள்ளல் சீதக்காதி இறந்து விட்டார். மற்றொரு செல்வர் அபுல்காசீம் மரக்காயர் என்பவர் அப்போது பொருளுதவி செய்ய முன்வந்தார்; நூல் நிறைவேறுவதற்கு வேண்டிய ஆதரவு தந்தார். கம்பர் தம் காப்பியத்தில் சடையப்ப வள்ளலை ஆயிரம் செய்யுளுக்கு ஒரு முறை புகழ்ந்து பாடியதுபோல், உமறுப்புலவர் இந்தச் செல்வரின் உதவியைச் சீறாப்புராணத்தில் நூறு செய்யுளுக்கு ஒரு முறை புகழ்ந்து பாடியுள்ளார். நூல் 5027 செய்யுளில் முற்றுப்பெற்றது. முகமது நபியின் வரலாற்றைச் சிறப்பாக அமைத்துப் பாடினார். ஆனால் வரலாற்றை முழுதும் அமைக்கவில்லை. அவர் பாடாமல் விட்ட வரலாற்றுப் பகுதியைப் பிற்காலத்தில் பனீ அகமது மரக்காயர் என்னும் புலவர் ‘சின்னச் சீறா’ என்ற பெயரால் பாடி முடித்தார். சீறா என்பது ஸீரத் என்ற அரபுச் சொல்லின் திரிபு; வாழ்க்கை வரலாறு என்பது அதன் பொருள்.

முகமது நபியின் வரலாறு கூறும் இந்தப் புராணத்தில் காப்பிய மரபின்படி நாட்டுப்படலமும் நகரப்படலமும் அமைத்துள்ளார். நபியின் நாடாகிய அரபு நாட்டை வருணிக்கும் புலவர், தமிழ்நாட்டில் உள்ள மரம் செடிகொடிகளும் பறவை விலங்குகளும் விளங்க வருணனை அமைத்துள்ளார். நான்கு நிலங்களாகப் பகுத்து இயற்கை வளத்தை விளக்கியுள்ளார். அரபுநாடு பாலைவனம் மிகுந்தது. ஆறுகள் இல்லாதது என்ற எண்ணமே தோன்றாதவாறு வருணனை உள்ளது. வெள்ளம்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:13:36(இந்திய நேரம்)