Primary tabs
ஆகிவிடுமா,” என்று எதிர்க்கிறான். அதற்காக அவன் அடிக்கப்படுகிறான். பட்ட அடி உடம்பில் ஆறிவிடுகிறது; மனத்தில் ஆறவில்லை. மேலும் பல எதிர்ப்புகள் செய்கிறான். பல துன்பங்கள் படுகிறான். இடையூறுகள் தீர்ந்தபாடு இல்லை. சாதி இறுமாப்பும் பணத் திமிரும் கொண்ட மேல் சாதியாருக்கு நீதிமன்றமும் துணைபுரிகிறது. மனிதனின் உரிமைப் போராட்டம் ‘நீண்ட பயண’மாக உள்ளது. அவர் எழுதிய ‘சடங்கு’ என்ற நாவல், இலங்கைத் தமிழரின் வாழ்வு மூட நம்பிக்கைகளுக்கும் கண்மூடி வழக்கங்களுக்கும் இரையாகி நலிவதை எடுத்துக்காட்டும் கதையாகும்.
இக்காலப் பாடல்கள்
பழைய மரபான செய்யுள்களால் புராணங்களும் துதிப்பாடல்களும் பற்பல, இலங்கையில் இயற்றப்பட்டன. இந்த நூற்றாண்டில் மக்களின் உணர்ச்சிக்கு ஏற்ற வடிவம் தரும் முறையில் புதிய செய்யுள் வடிவங்களைப் பயன்படுத்திப் பலர் பாட்டுகள் இயற்றிவருகிறார்கள். மகாகவி என்ற கவிஞர் ‘வள்ளி’ என்ற தொகுப்பில் பல பாடல்கள் தந்தள்ளார்; ஐந்து அடிகள் உள்ள பாடல்களாக நூறு பாடி, ‘குறும்பா’ என்ற பெயரால் தந்துள்ளார். அவற்றில் எள்ளல் சுவை (நையாண்டி) மிகுந்துள்ளது. காதலரின் உணர்ச்சிகளை எடுத்துரைக்கும் பாட்டுகள் பல உள்ளன. புதிய முயற்சி என்று கூறத்தக்க பாட்டுகள் இயற்றுவதில் ஆர்வம் கொண்ட அவர், கவிதை நாடகங்களும் படைத்துத் தந்திருக்கிறார். அவருடைய நையாண்டிச் சுவைக்கு எடுத்துக் காட்டாக ஒன்று கூறலாம். இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விரும்புவோருக்கு விசா கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதற்குக் காரணம் ஒன்றைக் கற்பனையாகக் கூறுகிறார் மகாகவி. என்ன காரணம்? தமிழில் கம்பராமாயணம் பாடிய கம்பர் தமிழ்நாட்டார். அந்தக் காவியத்தில் அவர் இராவணனைக் கொடியவனாகக் காட்டியுள்ளார். இராவணன் இலங்கை நாட்டான். இலங்கை நாட்டுத் தலைவனைத் தம் காவியத்தில் கம்பர் கொடுமைப்படுத்தியுள்ளார்; வைதுள்ளார்; ஆகையால் கம்பர் வழியில் வந்த தமிழ் நாட்டுத் தமிழர்களை வரவேற்க இலங்கைக்கு மனம் இல்லையாம்.
கம்பர்ஒரு காவியத்தைச் செய்தார்
கண்டபடி ராவணனை வைதார்
எம்போல்வார் இன்றெடுக்கும்
இவர்விழவுக்கு இங்குவர
நம்பிக்கையாக விசா எய்தார்.