Primary tabs
எழுதாமல், எழுத்துத் தொண்டைத் தொடங்கியவர்கள் அவர்கள். ரப்பர்த் தோட்டங்களில் மலாய் மக்களோடும் சீன மக்களோடும் சேர்ந்து உழைத்து வாழ்வதும், தமிழ் நாட்டைப்பற்றிக் கனவுகள் காண்பதும், சாதிமத வேறுபாடுகளைக் கடக்க முயல்வதும் ஆகிய புதுமைகள் அவர்களின் வாழ்வில் இருப்பதால், புதிய கதைகளுக்கும் கவிதைகளுக்கும் தேவையான கற்பனைகள் ஏராளமாக அந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்து வருகின்றன. அந்த நாட்டில் சிறுபான்மையோராக வாழ்ந்துவரும் தமிழர்களிடையே இந்த எழுத்தாளர்கள் தோன்றி இலக்கியம் படைத்துவரும் முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களின் தமிழ்நடை பெரும்பாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் நடைபோலவே இருந்துவருகிறது. இலங்கைத் தமிழ் வேறுபடுவது போல், மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ் வேறுபடவில்லை. அதற்குக் காரணம், இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய இடங்களில் பல நூற்றண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குடியேறி அங்கேயே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து தமிழ் மொழியைத் தமிழ் நாட்டுத் தொடர்பு போற்றாமலே பேசிவந்தமை ஆகும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் குடியேறிவர்கள்; அவர்கள் குடும்ப உறவு, கல்வி முதலிய பலவகையிலும் தமிழ் நாட்டின் தொடர்பை விடாதவர்கள்; ஆகையால் அவர்களின் மொழி அவ்வாறு வேறுபடவில்லை. அவர்கள் படைக்கும் நூல்களும் நடத்தும் இதழ்களும் தமிழ்நாட்டு நூல்களும் இதழ்களும் போலவே உள்ளன.
அந்த நாடுகளின் தமிழ் இலக்கியம் 1947 - க்குப் பிறகு வளர்ச்சி பெற்றது எனலாம். இன்றுவரை ஏறக்குறைய ஐம்பது பேர் எழுத்தாளராகப் பணிபுரிந்துள்ளனர். பலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர்; சிலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கவிதை எழுதுகின்றவர்களும் சிலர் உண்டு. ஆனால் ஒரு குறை உள்ளது; இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல, பத்திரிகைகளின் அளவில் வெளிவந்து நின்றுவிட்டவை. நூல்களாக வெளிவந்தவை சிலருடைய படைப்புகளே.
கதைகள், கவிதைகள்
மலேசிய எழுத்தாளர்களின் பல சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. பல கவிதைத் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. சிறுவர்க்கான கவிதை நூல்களும் அங்கு உள்ளன. சிறுவர்க்காகக் கவிதை எழுதுவோருள் சிங்கை முகிலன் குறிப்பிடத்தக்கவர். பரிதி என்பவரின் ‘வெண்ணிலா’ என்னும் கவிதை நூலும் நல்ல படைப்பு ஆகும். சோமன்சா, நெடுமாறன் என்பவர்களும் இவ்வகையில் நல்ல தொண்டு ஆற்றிவருகிறார்கள்.