Primary tabs
இடைவிடாமல் உழைத்த சான்றோர் அவர். நீதிபதி முதலான பதவிகளில் இருந்தபோதும் அவருடைய நாடகத் தொண்டு ஓயவில்லை. முதல்முதல் (1893) அவர் எழுதி நடித்தது புஷ்பவல்லி என்ற சமூக நாடகம். தொண்ணூறு நாடகங்கள் தாமே கற்பனை செய்து இயற்றினார். பிறமொழி நாடகங்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தந்தார். தமிழ் நாடக இலக்கியத்திற்கு அவர்போல் அவ்வளவு தொண்டு புரிந்தவர்கள் வேறு எவரும் இல்லை. ரத்னாவளி, மனோகரா, இரண்டு நண்பர்கள், கள்வர் தலைவன், வேதாள உலகம் என்பவை அவருடைய படைப்புத் திறனை எடுத்துக்காட்டும் சிறந்த நாடகங்கள். ‘சபாபதி’ நகைச்சுவையும் நையாண்டியும் வாய்ந்த தனிப் படைப்பாகும். அக்காலத்தில் அவருடைய நாடகங்களில் பங்கு ஏற்று நடிப்பதை ஒரு பெருமையாகக் கருதி முன்வந்தவர்கள் உண்டு. ஆங்கில நாடகங்களாகிய மாக்பெத், ஹாம்லெட், வெனிஸ் வணிகன் (Merchant of Venice), விரும்பியவண்ணமே (As You Like It) சிம்பெலின் என்பவற்றைத் தமிழில் ஆக்கித் தந்தார். விக்ரமோர்வசியம், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம் என்னும் வடமொழி நாடகங்களையும் மொழிபெயர்த்தார். நாடகத் துறையில் அவர்க்கு இருந்த ஆர்வத்தையும் அனுபவத்தையும் பயிற்சியையும் அவர் எழுதியுள்ள ‘நாடகத் தமிழ்’, ‘நாடக மேடை நினைவுகள்’, ‘நாடகக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?’ என்னும் நூல்கள் நன்றாக விளக்குகின்றன.
சங்கரதாஸ் சுவாமிகள் பழைய மரபை ஒட்டிப் பாடலும் உரைநடையும் கலந்து நாடங்கள் எழுதினார். சம்பந்த முதலியாரோ மேற்குநாட்டு முறையைப் பின்பற்றிப் பாடல் இல்லாமல் உரைநடையாலேயே நாடகங்கள் இயற்றினார். இசை பின்னணிக்கு வந்து உதவுமே தவிர, அவருடைய நாடக உரையாடலில் அமையாது. அவருடைய உரைநடையில் அடுக்குமொழிகள், அலங்கார எதுகைகள் முதலியவற்றை விட்டு, நேரான எளிய வாக்கியங்களையே கையாண்டார்.
சூரியநாராயணர் முதலானவர்கள்
சூரியநாராயண சாஸ்திரியார் என்னும் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகக்கலையின் வளர்ச்சிக்காக முயன்றார். தமிழ்மொழி நாடக இலக்கியம் பல பெற்றுச் செழிக்கவேண்டும் என்று ஆசை கொண்டார். நாடகத்தின் இலக்கணம்பற்றி ‘நாடக இயல்’ என்ற நூல் இயற்றினார். கலாவதி, ரூபாவதி, மானவிஜயம் முதலான நாடக நூல்களையும் இயற்றினார். ஆனால் அவை நடிப்பதற்கு உரிய நாடகங்கள் அல்ல; படிப்பதற்கும் அவ்வளவு சுவையாக அமையவில்லை. வழக்கில் இல்லாத அருஞ்சொற்கள் மிகுந்த தமிழ்நடையில் அமைந்தமையால்,