Primary tabs
நாடகத்தில் நடிப்பதிலும் நாடகத்தைப் படிப்பதிலும் எழுதுவதிலும் எவ்வளவு தயக்கம் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கலாம். நல்லவர்களாலும் கற்றவர்களாலும் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட துறையாக இருந்துவந்தபடியால், நாடகத்தில் பல குறைபாடுகள் இடம்பெற்றன. நல்ல காப்பியக் கதையை நாடகமாக்கி எழுதியபோதிலும் பிழைகள் பல புகுந்தன. சிலப்பதிகாரக் கதையை நாடகம் ஆக்கியவர்கள், கோவிலன் கர்ணகி மாதகி என்று திரித்தார்கள். கதைப் போக்கிலோ, மனம் போனபடி திரிபுகள் செய்தார்கள். சிலப்பதிகாரத்தில் ஓர் உத்தமப் பெண்ணாகக் காணப்படும் மாதவி, கோவலன் நாடகத்தில் பண ஆசை பிடித்த வேசையாகக் காட்சி அளிக்கிறாள். இவ்வாறே மற்றக் கதைகளிலும் வேண்டாத திரிபுகள் பல புகுத்தினார்கள். ஆனாலும் பொதுமக்களுக்கு வேண்டிய சுவைகள் குன்றாமல் பார்த்துக் கொண்டார்கள். கிராமங்களில் பாரதக் கதையைச் சொற்பொழிவுகளாக நிகழ்த்தும்போதெல்லாம், கிராமங்கள் திருவிழாக் கோலம் கொள்ளும். அந்த நாட்களில், மாலையில் சொற்பொழிவு முடிந்ததும், இரவில் பாரதக் கதையை ஒட்டிய நாடகங்கள் நடக்கும். அந்த நாட்களிலும் அப்படிப்பட்ட திரிபுகள் செய்தார்கள்.
அந்தக் காலத்தில் அவ்வாறு அறியாமையாலும் பொதுமக்களின் கவர்ச்சிக்காகவும் திரிபுகள் செய்யப்பட்டன என்றால், இக்காலத்தில் வேறு சில காரணங்களுக்காகக் கதைகளில் திரிபுகள் செய்யப்படுகின்றன. திரைப்படங்களின் முன்னேற்றங்களைப் பார்த்து, அவற்றை நாடகமேடைகளிலும் காட்ட முயல்கிறார்கள். ஆகவே, நாடகமேடையில் பல அமைப்புப் புதுமைகள் ஏற்பட்டு, அவற்றிற்காகக் கதையில் மாறுதல்கள் செய்கிறார்கள். இது இன்னொரு வகைக் குறையாகவே உள்ளது.
இக்கால நாடகங்கள்
பல நாவல்களை நாடகமாக அமைத்து நடிக்கச் செய்து புகழ் பெற்றவர் கந்தசாமி முதலியார் என்பவர். மேற்குநாட்டு முறையில் தமிழுக்கு நாடகம் அமைக்கும் துறையில் நல்ல பல முன்னேற்றங்கள் செய்தவர் அவர். இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன், மேனகா முதலிய நாவல்களைக் கந்தசாமி முதலியார் நாடகம் ஆக்கினார். பெரும்பாலும் நாவல்களில் உள்ள உரைநடையை அவ்வாறே பயன்படுத்தினார். அவர் முறையைப் பின்பற்றி இன்றும் சிலர் சில நாவல்களின் கதைகளை நாடகங்களாக ஆக்கிவருகின்றனர்.
பவானந்தம் பிள்ளை இயற்றிய நாடகங்கள் அரிச்சந்திரன், பாதுகா பட்டாபிஷேகம் முதலியன. எதுகை முதலியவை நிரம்பிய அடுக்குத் தொடர்களை உரையாடலில் நிரம்ப அமைத்தவர் அவர்.