தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 284 -

நாடக வளர்ச்சியில் வானொலி நிலையம் ஆற்றிவரும் தொண்டும் இங்குக் கருதத்தக்கது. முழு நாடகங்கள் சில அவ்வப்போது ஒலி பரப்பப்பட்டன. அவற்றுள் பல, நாவல்களிலிருந்தே வானொலிக்கு ஏற்றவாறு நாடக வடிவில் அமைக்கப்பட்டவை. ஓரங்க நாடகங்கள் அளவில் சிறியனவாக இருத்தலால், அரைமணி அளவில் வானொலியில் ஒலிபரப்புவதற்கு ஏற்றவனவாக அமைந்தன. ஆகவே, பல பொருள்பற்றி ஓரங்க நாடகங்கள் இயற்றப்பட்டன. வார இதழ்களும், திங்கள் இதழ்களும் ஓரங்க நாடகங்கள் பலவற்றை வெளியிட்டன. ச. து. சு. யோகி, துறைவன், சுகி, நாணல் முதலானோர் ஓரங்க நாடகங்கள் பல இயற்றினார்கள். சுத்தானந்த பாரதி, பூரணம் விசுவநாதன், கோமதி சுவாமிநாதன், எஸ். டி. சுந்தரம், பி. எஸ். ராமையா முதலானவர்களின் நாடகங்கள் குறிப்பிடத் தகுந்தவை. கு. சா. கிருஷ்ணமூர்த்தி, சீநிவாசராகவன், பெ. தூரன் முதலியவர்கள் செய்யுள் நாடகங்களும் இயற்றினார்கள்.

பெரும்பாலான நாடகங்கள், நாடகம் பார்க்கும் மக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டே இயற்றப்படுகின்றன. நடிப்பதற்கு ஏற்றவாறு அமையாமல், படிப்பதற்கு உரியனவாக அமைந்துள்ள நாடகங்களும் அவற்றின் ஆசிரியர்களால் இயற்றப்படும் போது, அந்த நோக்கம் கொண்டே - நாடகம் பார்ப்பவர்களின் மனநிலைக்குத் தக்கவாறே - இயற்றப்பட்டுள்ளன. பார்க்கும் மக்கள் தரும் பணவருவாயை நம்பியே வாழவேண்டியுள்ள திரைப்படங்கள் வந்தபிறகு, நாடகங்கள் மக்களின் மனநிலைக்கு ஏற்ப எழுதப்படுவது கட்டாயமாகிவிட்டது. ஆயினும் இங்கும் ஒரு நிலையான போக்கு இல்லை. சாதி ஒழிப்பு, கலப்பு மணம், கற்புத் தவறியவளை மன்னித்து ஏற்பது, வறுமையின் கொடுமை முதலிய புரட்சியான கருத்துகள் அமைந்த நாடகங்கள் ஒரு காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இந்தக் கருத்துகளைமட்டும் வற்புறுத்தி நாடகத்தின் கலையமைப்பைப் புறக்கணித்து எழுதியவர்கள் சிலர். கலையின் சிறப்புக் குன்றுமாறு செய்துவிட்டனர். வெறும் பொழுது போக்கான நகைச்சுவை மிகுந்துள்ள நாடகங்களை மக்கள் விரும்பத் தலைப்பட்டார்கள். ஒரு காலத்தில் சிறப்பிழந்திருந்த புராணக் கதைகளைக் கொண்ட நாடகங்கள், மறுபடியும் தலையெடுக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு மக்களின் சுவையும் மாறிமாறி வருவதால், நாடக இலக்கியம் படைப்பவர்கள் திகைக்க நேர்கிறது; தரமான, நிலையான இலக்கியம் படைப்பதற்கு இடையூறு ஆகிறது.

வட்டாரமொழி நாடகங்கள்

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான வட்டாரப் பேச்சுமொழிகள் (கிளைமொழிகள்) பேசப்படுகின்றன. அந்தப்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:27:06(இந்திய நேரம்)