தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 337 -

நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ்வதற்காகப் பாடல் பல பாடிய அவருடைய நெஞ்சம், நாட்டு விடுதலையைமட்டும் பாடி அமையவில்லை. நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கு இடையூறாக இருந்து வந்த பலவகைக் கொடுமைகளையும் எதிர்த்துச் சாடியது. சாதி வேறுபாட்டைத் தாக்கிப் பாடினார்; மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழங்கினார். குழந்தைகளுக்கு ஊக்கம் ஊட்டிப் பாடினார்; பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமையை எதிர்த்துப் போரிட்டார். தாய் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்திற்கே மதிப்புக் கொடுத்து வந்த அந்நியக் கல்விமுறையைத் தாக்கினார். இவ்வாறு அவர் சமுதாய நன்மைக்கான பாடல்கள் பலவற்றைப் பாடினார். அவை இன்றும் உணர்ச்சி மிகுந்த கவிதைகளாகப் பாடிப் போற்றப்படுகின்றன.

பாரதியார் பிறவியிலேயே சுதந்தரமான மனப்பான்மை உடைய கவிஞர்; சுதந்தரத்தைத் தெய்வமாக வழிபட்டுப் பாடிய கவிஞர். செல்வம் நிரம்பிய ஜமீன்தார்களிடையே வாழ்ந்து அவர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் சூழலில் வளர்ந்த அவருடைய மனம் அதைவிட்டு உயரப் பறந்தது. சென்னையில் சுதேசமித்திரன் என்னும் நாளிதழுக்கு ஆசிரியராக அமர்ந்த பிறகு, நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் அவர் நெஞ்சம் ஈடுபட்டது. அவர் எழுதிய உரைநடையிலும் கவிதையிலும் புதிய வேகமும் ஆர்வமும் ஏற்பட்டன. கற்பவர்களின் நெஞ்சை உடனே மாற்றிச் செயல்படுத்தும் தீவிர உணர்ச்சி அவருடைய எழுத்துகளில் காணப்பட்டது. தம் எழுத்துகளால் சுதேசமித்திரன் இதழுக்கு அரசாங்கத்தின் தடைகளும் இடையூறுகளும் ஏற்படுவன போல் இருந்தன. உடனே அதைவிட்டு ‘இந்தியா’ என்ற இதழைத் தாமே தொடங்கி நடத்தினார். ஆங்கில அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தி ஒடுக்க முயன்றது. பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். அங்கு வ. வே. சு. ஐயருடனும் அரவிந்தரோடும் நட்புகொண்டார். அப்போது அவர் இயற்றிய அழகான, உணர்ச்சிமிக்க, கவிதைகள் பல.

அந்தக் காலத்து விடுதலைப் போராட்டத்திற்காக நாட்டு மக்களைத் தட்டி எழுப்புவதற்காகப் பாடப்பட்டபோதிலும், தேசீயப் பாடல்களில் பல இன்றும் உணர்ச்சி ஊட்டும் கவிதைகளாக உள்ளன.

பாரத தேசம்என்று பெயர் சொல்லுவார் - மிடிப்
பயம்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்

என்ற பாடல் இன்றும் பாடக் கேட்டால் நாட்டு உணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. இன்று பெரிதும் பேசப்படும் நாட்டு ஒருமைப்பாட்டுக்கு உரிய பல கருத்துகளை அதில் விதைத்துள்ளார். சிந்து நதியின்மேல் நல்ல நிலவின்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:41:50(இந்திய நேரம்)