தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 349 -

இவற்றையே அவருடைய கட்டுரைகளில் காண்கிறோம். மொழிபெயர்ப்புத்துறையிலும் அவர் தொண்டு பாராட்டத்தக்கது. தாகூருடைய சிறுகதைகள் சிலவற்றையும் அவர் மொழிபெயர்த்தார். பகவத் கீதையை எடுப்பான நடையில் தமிழாக்கித் தந்துள்ளார். அவர் தொட்ட துறைகள் எல்லாம் புதிய ஒளி பெற்றன. பாரதியாரின் எழுத்தாற்றல் அத்தகையது.

பாரதிதாசன்

இருபதாம் நூற்றாண்டில் தமிழில் பாரதியாருக்கு அடுத்தபடி புகழ்பெற்று விளங்கும் கவிஞர் ‘புரட்சிக்கவிஞர்’ எனப்படும் பாரதிதாசன் (1891 - 1964). அவருடைய பெயர் கனகசுப்புரத்தினம். புதுச்சேரியில் பாரதியார் அரசியல் காரணத்தால் ஒதுங்கியிருந்த காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகி அன்பையும் பாராட்டையும் பெற்று, அதனால் பாரதிதாசன் என்ற புனைபெயர் வைத்துக்கொண்டார். அவருடைய வாழ்வில் அரசியல் கட்சிகளின் தொடர்பும் ஏற்பட்டது; தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்; இதழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்; திரைப்படத் துறையிலும் தொடர்பு இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்குத் தமிழ்மக்களின் உள்ளத்தில் வாய்த்த இடம் ‘புரட்சிக்கவிஞர்’ என்பது ஆகும்.

அவருடைய கவிதைகளில் இனிய இசைநயம் உண்டு; உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப்புயல் வீசும். அவர் கையாளும் சொற்கள் மக்களுக்கு நன்கு பழக்கமான எளிய சொற்களே. ஆனால் அந்தச் சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது, நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும்; ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகி விடும்; உணர்த்த விரும்பியவற்றை அழுத்தமாக, திட்பமாக உணர்த்தும் வன்மை அந்தச் சொற்களுக்குப் பிறந்துவிடும். தமிழில்  மரபாக வந்துள்ள யாப்பைப் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்; நாட்டுப் பாடலில் பயின்ற சிந்து முதலியவற்றையும் கையாண்டுள்ளார்; இசையுலக மெட்டுகளையும் எடுத்தாண்டிருக்கிறார்; புதுவகையான செய்யுள் வகைகளையும் இயற்றியிருக்கிறார். கழைக் கூத்தரின் ஆட்டத்தைக் கவனித்து, அவர்களின் ஆடலோடு பொருந்திய இசையையும் பயன்படுத்திப் பாடல் ஒன்று இயற்றியிருக்கிறார். அதை அவரே நடத்திய ‘குயில்’ என்ற இதழில் வெளியிட்டார். கழைக் கூத்தாடியின் ஓசையின்பத்திற்காகவும் அதைப் படிக்கலாம்; தமிழ்ச் சொற்கள் அந்த ஓசைக்கு ஏற்றவாறு கூத்தாடுவதைக் கேட்டு இன்புறலாம்; அந்தப் பாட்டுவாயிலாகத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புத்துயிர் ஊட்ட விரும்பும் ஆர்வத்திற்காகவும் அதைக் கற்கலாம். தமிழினம் எலும்புக்கூடாக இருக்கிறதாம். அதில் சதையும் இல்லையாம்; சத்தும் இல்லையாம். அதற்குச்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:45:11(இந்திய நேரம்)