Primary tabs
இவ்வாறு புதுமுறையில் பாடிய பாடல்களோடு, பழைய மரபை ஒட்டிப் பாடிய அழகம்மை விருத்தம் முதலான பாடல்களையும் காணலாம்.
சென்ற நூற்றாண்டில் ஆங்கில அறிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’ (Light of Asia) என்பதைத் தேசிக விநாயகம் பிள்ளை தமக்குக் கைவந்த இனிய நடையில் அழகாகத் தழுவி எழுதியுள்ளார். அவை அவருடைய தனிப் படைப்புப் போலவே அவ்வளவு புதுமையும் சுவையும் கலந்து விளங்குகின்றன. புத்தரிடம், இறந்த குழந்தையை எடுத்துவந்து உயிர் பெற்றுத் தரவேண்டும் என்று உருகிக் கேட்கும் தாயின் துயர உணர்ச்சியை மிக நெகிழ்வான பாடல்களாய்த் தருகிறார்:-
பெற்ற வயிறு துடிக்கு தையா - ஒரு
பிள்ளையும் வேறுஎனக்கு இல்லை ஐயா
உற்ற உறவினர் இல்லைஐயா - என்மீது
உள்ளம் இரங்கிட வேணும் ஐயா.
இது தாயின் வேண்டுகோள்.
வாய்முத்தம் தாராமல்ல்ல்ல்
மழலையுரை ஆடாமல்
சேய்கிடத்தல் கண்டுஎனக்குச்
சிந்தை தடுமாறுது ஐயா.
முகம்பார்த்துப் பேசாமல்
முலைப்பாலும் உண்ணாமல்
மகன்கிடக்கும் கிடைகண்டு
மனம்பொறுக்கு தில்லை ஐயா
தாயாகி உள்ளம்
தருக்கி இருந்ததுபோய்ப்
பேயாகி இன்று
பிணம்தூக்கி நிற்பேனோ
முதலான பாடல்களின் நடை தாயின் துயர உணர்ச்சியை நேரே எடுத்துரைக்கின்றன.
பாரசீகக் கவிஞர் உமார்கயாம் பாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பாக எட்வார்ட் பிட்ஸ்ஜெரால்ட் எழுதியவற்றைத் தழுவி இவர் பாடியுள்ள பாடல்களும் நல்ல இலக்கியச் செல்வங்களே. தழுவல் ஆகையால், தயங்காமல் தமிழ்நாட்டுச் சூழ்நிலையை அவற்றில் அமைத்துவிடுகிறார். அங்கு வரும் வள்ளல்கள் தமிழ்நாட்டுப் பாரி என்னும் வள்ளல்போல் வாரிக் கொடுத்தவர்களாம். உமார் கயாம் பாடல்களிலே தமிழ்நாட்டுக் கம்பரையும் காண்கிறோம்.