Primary tabs
பதிப்புரை
பாவேந்தர் பாரதிதாசனின் மற்றும் அவர் படைப்புகளில் ஆழ்ந்த
ஈடுபாடும் உடையவர் முனைவர் ச.சு.இளங்கோ.தாம் உயர்ந்தவை
சிறந்தவை தேவையானவை எனக் கருதியவற்றை எடுத்துச் சொல்லி
மக்களிடையில் பரப்புவதற்காகப் பாவேந்தர் பல ஏடுகளை வெளியிட்டு
வந்துள்ளார். இவற்றுள் “குயில்” ஒன்று. 1948 டிசம்பர் முதல் 1961
பிப்ரவரி வரை அவ்வப்பொழுதும் நீண்ட இடைவெளியிலும் “குயில்”
நாள் வார திங்கள் இதழாக வெளி வந்தது.அவ்விதழ்களில் பாவேந்தர்
தீட்டி வந்த தலையங்கங்களைத் தொகுத்து முனைவர் இளங்கோ
இந்த நூலில் தந்துள்ளார்.
தலையங்கங்கள் பலப்பல பொருள் பற்றியவை. நாட்டு நடப்பு,
தமிழ், அரசியல், மக்கள் பிரச்சினைகள் பற்றிய பல்வேறு
தலைப்புகளில் அக்கால நிகழ்ச்சிகளையும் அவற்றிற்குப் பாவேந்தர்
கண்ட மாற்று முடிவுகளையும் தலையங்கங்கள் எடுத்துச்
சொல்லுகின்றன.
பாரதியாரின் பாங்கனாகத் தொடங்கிச் சில காலம் சுயமரியாதை
இயக்கத்திலும் பின் திராவிட இயக்கத்திலும் உடன் சுழன்றுப்
பிற்காலத்தில் மாறுபட்டார் பாவேந்தர். இயக்கத் தலைவர்களையும்
இயக்கங்களையும் சில காலம் ஆதரித்தும் சிலகாலம் மறுத்தும்
மறுத்தபோது சுடு சொல் கொண்டு தாக்கி வசை பாடியும்
உள்ளதனைக் கட்டுரைகளில் காணலாம். இத்தாக்குதலுக்கு
எவருமே விலக்கல்லர். இவர்களுள் பெரியார் இராமசாமி, அறிஞர்
அண்ணா முதல் “குத்தூசி” குருசாமி வரைப் பலர் அரசியல்வாதிகள்,
அறிஞர்கள் பலர் - அடங்குவர்.
இந்தப் பின்புலத்தில் இந்திய - தமிழகத் தலைவர்களை,
அறிஞர்களைத் தாக்கி வரைந்த தலைப்புக் கட்டுரைகளைத்
தொகுத்து அன்பர் ச.சு. இளங்கோ அணுகிய போது, நூல்
வெளிவந்தால் தாக்குண்ட இயக்கங்களும் தலைவர்களும்
வருந்துவார்கள்.வெளியீட்டாளர்களை வெறுப்பார்கள் என்ற அச்சம்
ஒருபுறம் இருப்பினும் தலையங்கக் கட்டுரைகள் எத்துணைக்
கடுமையாக இருப்பினும்,அவை வரலாற்று ஆவணங்கள் என நிலை
பெற்று விட்டன என்றுணர்ந்து வெளியிட இசைந்தோம்.