தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Mannil Vin


முகவுரை

மண்ணுலக வாழ்விற் பெரும்பாலார்க்குத் துன்பமே மிகுவதனால், அவ்வுலகம் மண்போல் இழிந்ததென்றும், விண்ணுலகம் ஒருவராலுங் கண்டறியப்படாவிடினும், அது மக்களினும் உயர்ந்த தேவர் வாழிடமாதலால் எல்லார்க்கும் இன்பந்தரும் வகையிற் பொன்போற் சிறந்ததென்றும், பொதுவாகச் சொல்லவுங் கருதவும் படுகின்றன.

மண்ணுலகத்திலும், தக்க அரசிடமிருந்து செங்கோலாட்சி செய்யின் விண்ணுலக இன்பம் நுகர்தல் கூடும். இன்பம் என்பது, அவரவர் தேவைப் பேற்றையும் பொந்திகையையும் (திருப்தியையும்) பொறுத்ததேயன்றி, செல்வச் சிறப்பையும் பல்வகை யுயர்திற நுகர்ச்சியையும் பொறுத்ததன்று. மேலும், விண்ணுலக வின்பம் வீட்டின்பம் போல் அளவிறந்ததும் நிலையானதும் அன்றாதலின், அது மனநிறைவான மண்ணுலகச் செங்கோலாட்சி வாழ்வினுஞ் சிறந்ததாகாது.

உலகில் முதன்முதல் தோன்றிய ஆட்சிவகையான கோவரசு (Monarchy) செங்கோலாட்சியா யிருந்த காலத்திலும் இடத்திலும், மக்கட்டொகை வரம்பிற்குட்பட் டிருந்ததுவரை, விண்ணின்பம் விளைப்பதா யிருந்தது. இந் நூற்றாண்டிலோ, மக்கட்டொகை இரு மடங்கும் மும்மடங்கும் நான்மடங்குமாகப் பெருகி, விளைவு குன்றி உணவுத்தட்டு ஏற்பட்டு மக்கள்பட்ட இடர்ப்பாட்டை, ஆங்காங்கும் இடையிடையும் தோன்றிய கொடுங்கோலாட்சி மிகுத்து விட்டதனால், குடியரசு (Democracy), மக்களாட்சி (Republic), கூட்டுடைமை (Socialism) ஆகிய பொதுமக்க ளரசுகள் ஏற்பட்டுவிட்டன.

கூட்டுடைமையைப் பொதுவுடைமை (Communism) என்று பலர் தவறாகக் கூறுவர். பணநடமாட்டமின்றி, எல்லாருந் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்தவுரிமையொடு பயன்படுத்தி, ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும்.

பொதுவுடைமை யென்று தவறாகச் சொல்லப்படும் கூட்டுடைமை நடைமுறையில் முதன்முதலாக 1917-ல் இரசியாவில் தோன்றியதனால், அதுவே அக் கொள்கைத் தொடக்கமென்று எல்லாருங் கருதிக்கொண்டுள்ளனர். எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும், வகுப்புவேற்றுமையைத் தோற்றுவிக்காததும், உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும், இறை வழிபாட்டை மறுக்காததும், தனியுடைமையை விலக்காததும், பகுத்தறிவிற்கு முற்றும் ஒத்ததும், உயரியதுமான கூட்டுடைமை யாட்சி அல்லது வாழ்க்கை, கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுவே இப் பொத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. படித்தறிக.

vot என்னும் ஆங்கிலச்சொல் (vow) (L. voveo) என்னும் வினையினின்று தோன்றியுள்ளதால், நேரி என்று இப் பொத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காட்டுப்பாடி விரிவு,
31.8.1973                             
 ஞா.தேவநேயன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:27:24(இந்திய நேரம்)