Primary tabs
தென்மொழியின் பங்களிப்பு
தமிழின மேன்மைக்கு வித்திட்ட பெருமக்களின் உழைப்பை, தம் ‘தென்மொழி‘ இதழின் வாயிலாக இளமைக் காலத்தில் என் போன்றோர் உள்ளத்தில் விதைத்துத் தனித்தமிழ் இயக்கத்திற்கு எம்மை ஈர்த்த பெருமைக்கும் நன்றிக்கும் உரியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். தென்மொழியால் எம் போல்வார் பாவாணரின் பேரறிவைக் கண்டு போற்றவும், வணங்கவும், மகிழவும் முடிந்தது. இந்த நேரத்தில் ‘பாவலரேறு‘ பெருஞ்சித்திரனாரை எண்ணி வணங்குகிறேன்.
உடன்பிறந்தார் இருவர்
பெரும்புலவர் அ.நக்கீரன், புலவர் அ.சித்திரவேலன் ஆகிய இப்பெரு மக்கள் இருவரும் என்னைச் செதுக்கியவர்கள். இவர்கள் தோன்றி யிராவிடில் நான் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்க முடியாது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைத் தமிழுலகம் அறியச் செய்த பெருமைக்கும், நன்றிக்கும் உரியவர்கள் மாமா பெரும்புலவர் நக்கீரனார் அவர்களும், மாமா புலவர் அ.சித்திரவேலன் அவர்களும் ஆவர். என் இளமைக் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். சமூகக் கேடுகள் மலிந்து சின்னபின்னமாகக் கிடந்த என் ஊர் மக்களை ஒன்றுகூட்டி, கல்வியறிவு புகட்டி மனிதர்களாய் வாழவைத்த பெருமைக்குரியவர்கள் இவ்விருவரும். எங்கள் ஊரான உறந்தைராயன்குடிக் காட்டின் வரலாற்றோடு இவர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்தது. நான் பொது வாழ்வில் ஈடுபட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வு பெறுவதற்கும், தந்தை பெரியாரின் கொள்கைகளில் எனக்கு ஆழமான பிடிப்பு ஏற்படுவதற்கும், தனித்தமிழ் இயக்கத் தந்தை பாவாணர் அவர்களின்பால் எனக்குப் பற்று ஏற்படுவதற்கும் இப் பெருமக்கள் இருவரும் காரணமாவர்.
பொதுவாழ்வில் ஈடுபடுவர்கள் மான அவமானம் பார்க்காது, தன்னலம் கருதாது தொண்டாற்ற வேண்டும் என்று தமிழர்க்கு இலக்கணமாய் அமைந்த தந்தை பெரியாரின் கூற்றுக்குச் சான்றாக அமைந்தவர் பெரும்புலவர் நக்கீரனார் ஆவார்; உழை, உயர்,