தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


உலக மொழிகளுக்குள் தமிழ் தலைமையானதா யிருப்பினும், (1) சரித்திர மறியாமை, (2) சொல்லியலகாரதியின்மை, (3) முதுநூல்க ளிறந்துபட்டமை, (4) மொழிபற்றிய தவறான அரசியற் கட்சிக் கொள்கை, (5) கலவை மொழிநடை, (6) தமிழன் அடிமை யுணர்ச்சி, (7) தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் ஆட்சியிடங்களிலு மிருத்தல், (8) ஆராய்ச்சியின்மை, (9) மதப்பற்றினால் பிறமொழி தழுவல், (10) பெரும்பான்மைத் தமிழரின் கல்லாமை முதலிய காரணங்களால் தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருக்கின்றது. இந்திய சரித்திரத்தைத் தெற்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும்; இந்திய நாகரிகம் திரவிடம் என்பதையும்; திரவிட உடலமைப்பைத் திரவிட மன்னர், தமிழ வேளிர், வேளாளர் முதலியார் முதலிய குலத்தினர் என்றிவரிடைத்தான் காணமுடியு மென்பதையும்; திரவிடனைக் காட்டுமிராண்டியாகச் சரித்திர நூல்களிற் காட்டியிருப்பதும் கூறியிருப்பதும் பெருந்தவறென்பதையும்; ஆரியர் வருமுன்பே, அன்றன்று, பனிமலை தோன்றுமுன்பே, குமரிநாட்டில் சைவமும் (சேயோன் வழிபாடு), மாலியமும் (மாயோன் வழிபாடு) முறையே குறிஞ்சி முல்லைத் தமிழர் மதங்களாயிருந்தன என்பதையும்; உலகியலும் மதவியலும் பற்றிய திருந்திய பழக்கங்கள் இன்றும் தென்னாட்டிலேயே உள்ளன என்பதையும்; எந்நாட்டிலும் மக்களுள் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என இரு சாரார் இருப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தொன்றுதொட்டு உள்ளனரென்பதையும்; அவருள் உயர்ந்தோரின் மதங்களையும் பழக்க வழக்கங்களையுமே ஆரியர் மேற்கொண்டு அவற்றைத் தவமாகக் காட்டினர் என்பதையும்; மொழிகளில் தேவமொழியென ஒன்றில்லை யென்பதையும்; அங்ஙன மிருப்பின், அது இயற்கையும் எளிமையும் வெளிப்படையும் நடுநிலை அன்பு பிறப்பொப்பு வேளாண்மை முதலிய கருத்தறிவிப்பும்பற்றித் தமிழேயாம் என்பதையும்; பழந்தமிழர் பிற துறைகளிற் போன்றே மொழி, இலக்கியம், இலக்கணம் என்பவற்றிலும் தலைசிறந்திருந்தனர் என்பதையும்; தாம் கருதிய எல்லாக் கருத்துகளையும் அறிந்த எல்லாப் பொருள்களையும் குறிக்கச் சொல்லமைத் திருந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.

இதனால், வடமொழியை முதன்மொழியாயும், வடநூலை முதனூலாயும் வைத்துத் தமிழாராயப்புகின். உண்மைக்கு நேர்மாறான முடிபுகளே தோன்று மென்பதையும், வீரசோழியம், இலக்கணக்கொத்து, பிரயோகவிவேகம் முதலியன அளவை நூல்களாகா என்பதையும் உணர்தல் வேண்டும்.

இயல்பான மொழிகளும் சொற்களும் ஒரு நெறிப்பட்டே தோன்றி இயங்குகின்றமையின், முறைப்படி யாராயின் அவற்றின் நெறிமுறைகள் யெல்லாம் கண்டுகொள்ளலாம் என்பது, இச் சுட்டு விளக்கத்தை நடுநிலையாய் நுணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம்.

எனது மொழியாராய்ச்சி குன்றாவாறு இடையிடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப்பாடுடையேன்.

அதன் வெளியீட்டிற்கும் தோன்றாத் துணை யாயிருந் துதவியருளும் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை நெஞ்சார நினைத்துத் தலையார வணங்குகின்றேன்.

ஞா. தேவநேயன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:45:16(இந்திய நேரம்)