Primary tabs
வடமொழி வரலாறு
இவ்வுலகில்
இதுவரை நிகழ்ந்துவந்த பெரிய ஏமாற்றுக்களுள்
தலைமையானது, வடமொழி தேவமொழி என்பதே. எங்ஙனமெனின், பழங்குடி
மக்களான தமிழரும் திரவிடரும் ஏனையிந்தியருமட்டுமன்றி, இற்றையறிவியல்
கண்ட ஆங்கிலரும்
ஐரோப்பியரும் அமெரிக்கரும் இவ்வேமாற்றிற்கு
ஆளாகியுள்ளனர்.
தமிழர்,
சிறப்பாகத் தமிழ வேந்தர், ஏமாறியதற்குக் கரணியம், அவரது
(பகுத்தறிவைப் பயன்படுத்தாத) பழங்குடிப் பேதைமையும் கொடைமடமும்
மதவெறியுமே. வேத ஆரியரின் ஏமாற்றிற்கு அவரது வெண்ணிறமும் அவரது
வேதமொழியின் ஆரவாரவொலியும் துணைநின்றன. மேலையர்
ஏமாறியதற்கோ, தமிழ்மறைப்புண்டு கிடப்பதும் தமிழர் ஆரியர்க்கு
அடிமைப்பட்டிருப்பதுமே கரணியமாகும்.
கால்டுவெலார்
செந்தமிழ் நாட்டு நடுவே அரை நூற்றாண்டு
செந்தமிழை ஆராய்ந்தேனும், தமிழரின் பல்துறைத் தாழ்வும்
தாழ்வுணர்ச்சியும், ஆரியர்க்கு முற்பட்ட தமிழிலக்கிய முற்றழிவும்,
கடைக்கழக எச்ச நூலின் அற்றை மறைவும், தமிழின் தென்மை தொன்மை
முன்மைத் தன்மைகளைக் காணமுடியாவாறு அவர் கண்களை இறுகக்
கட்டிவிட்டன.
இந்நூற்றாண்டில்
மறைமலையடிகள் கிளர்ந்தெழுந்து தமிழ்த்
தூய்மையைப் புதுக்கியிருப்பினும், பல்வகைப்பட்ட கோடன்மாரின்
இரண்டகச் செயல்களால், அதன் முன்னேற்றம் பெரிதும் தடைப்பட்டுளது.
வேற்றவராலும்
தன்னவராலும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத்
தமிழுக்குச் செய்யப்பட்டுவரும் தீங்கு, ஏட்டிலடங்கா; எண்ணத் தொலையா.
இருக்கின்ற நெருக்கடி போதாதென்று இன்று இந்தியும் வந்து தமிழை
அடர்க்கின்றது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை, தமிழின் அரியணையில்
ஆரியம் அமர்ந்திருப்பதே. ஆதலால், தமிழை வடமொழியினின்று மீட்டு
மீண்டும் அதை அரியணையில் அமர்த்தினாலன்றி, தமிழும் தமிழனும் வாழ
வழியில்லை. ஆகவே, இந்நூலை எழுதத் துணிந்தேன்.
தமிழ்
திரவிடத்திற்குத் தாயாக மட்டுமன்றி, ஆரியத்திற்கு மூலமாகவும்
உள்ளதென்னும் உண்மையை, இந்நூலாற் கண்டு தெளிக.
இந்நூலை
எழுதுவதற்குத் துணையாகச் சில அரிய ஆராய்ச்சி
நூல்களை அன்பளிப்பாகவும் கடனாகவும் தந்துதவிய, காஞ்சிபுரம்
பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும் துணை முதல்வருமாகிய,
பேரா. கோ.இராமச்சந்திரனார் (எம்.ஏ.) அவர்கட்கு யான் பெரிதும்
கடப்பாடுடையேன்.