மொழி மனித வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையது. 
 மொழி மனிதச் செயற்பாடுகளுள் ஒன்று; மனித வாழ்வின் பல்வேறு பண்புக் கூறுகளுடன் தொடர்புடையது. 
 ஆகையால் அது பல்வேறு கோணங்களில் ஆராய இடமளிக்கிறது. இவ் வாய்வுகள் பயனுள்ளவையாகவும் 
 ஆர்வம் மிக்கனவாகவும் இருக்கின்றன. மொழியை அன் அக அமைப்பினைக் கொண்டு ஆராயும் 
 அறிவியலே மொழியியல். வரலாற்று மொழியியல், ஒப்பியன் மொழியியல், வண்ணனை 
 மொழியியல் என மொழியியல் முத்திறப்படும்.
  
 
 
 மொழியில் மாற்றங்கள் இயற்கையானவை; தவிர்க்க 
 இயலாதவை. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது என்பதை அடிப்படையாகக் கொண்டது 
 வரலாற்று மொழியியல். குடும்ப மொழிகளுக்கிடையேயான தொடர்பினை ஆராய்வது ஒப்பியன் 
 மொழியியல். ஒலியன், உருபன் ஆகியவற்றை அடிப்படை அலகுகளாகக் கொண்டு மொழியின் 
 அமைப்பினை விளக்குவது வண்ணனை மொழியியல்.
  
 
 
 மொழித் தோற்றத்தை மாந்தன் தோற்றத்துடன் 
 இணைத்துப் பார்ப்பது பாவாணரது ஆய்வு. இவ்வாறு கொள்ளும்போது மொழித்தோற்றமும் 
 மாந்தன் தோற்றமும் ஒன்றனையொன்று சார்ந்து நிற்பனவாக இருக்கின்றன. மக்கள் தோன்றிய 
 குமரிக்கண்டத்திலிருந்து வடக்கே சென்றவர்களுள் பலர் வட இந்தியத் திராவிடர்களானார்கள். 
 இவர்களுள் சிலர் வடமேற்கே எத்தியோப்பியா, எகிப்து, கிரேக்கம், இத்தாலி 
 போன்ற நாடுகளுக்குச் சென்று ஆரியராயினர். வட இந்தியாவில் இருந்த திராவிடம் 
 சூரசேனம், பைசாசம், மாகதம் என்னும் மூவகைப் பிராகிருதங்களாக மாறியது. விந்திய 
 மலைக்குத் தெற்கிலிருந்து செந்தமிழும் கொடுந்தமிழும் திராவிடமாகும். இதுவும் ஒரு 
 பிராகிருதமாகக் கொள்ளப்பட்டது.
  
 
 
 வடமேற்கே சென்ற ஆரியர்களுள் ஒரு வகுப்பினர் 
 சின்ன ஆசியா, பாரசீகம் முதலிய நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். இவர்களே 
 வேதஆரியர். வேத ஆரியம் வழக்கிழந்த பின் அதனொடு நால்வகைப் பிராகிருதங்கள் சேர்த்து 
 உருவாக்கப்பட்டதே இலக்கியக் கிளைமொழியாகிய சமற்கிருதம் என்கிறது பாவாணரின் 
 மொழியாய்வு.
  
 
 
 மாந்தன் பரவலையும் மொழித்தோற்றத்தையும் 
 ஒருங்கிணைத்துப் பார்ப்பது பாவாணரின் ஆய்வுமுறை. இவ் வடிப்படையிலேயே வரலாற்றுடன் 
 தொடர்புடைய வரலாற்று மொழியியலைச் சிறந்தது என்றும், ஒப்பியன் மொழியியல் 
 வரலாற்றை அறியத் துணை செய்வதால் அதற்கு அடுத்த படியாகச் சிறந்தது என்றும், ஒரு 
 மொழியை மட்டும் விளக்குவதால் வண்ணனை மொழியியல் இலக்கணத்தின் பாற்பட்டது என்றும் 
 குறிப்பிடுகிறார் பாவாணர்.