வண்ணனை மொழிநூலின் வழுவியல்
களையப் பெற்றுச் செவ்வையாக இப் பதிப்பு
வெளிவருகின்றது. இதுவரை வெளிவந்த
தமிழ்நூல்களில் உள்ள பிழைகள் கணக்கில. பல
நூல்களும் பிழைதிருத்தப் பட்டியல் ஒன்றனை
நூல் இறுதியில் சேர்ப்பது வழக்கம். அந்தப்
பட்டியலே இல்லாது இந் நூல்கள் அனைத்தும்
வெளியிடப்படுகின்றன. இதுவரை வெளிவந்த
தமிழ்நூல் பதிப்பு அனைத்தையும் இந்தப்
பதிப்பு வெல்லும்; மக்களின் பேராதரவைப்
பெறும் என்னும் நம்பிக்கை உடையேன்.
பிழையின்றி நூல்கள் வெளிவரப் பதிப்பாசிரியர்,
மெய்ப்புத் திருத்துநர், கணினி இயக்குபவர்,
கட்டமைப்பினர் அனைவர் பணியும் ஒன்றுசேர
வேண்டும். அவை அனைத்தும் இப் பதிப்பில்
அமைந்துள்ளன.
பாவாணர் நூல்களில் காணப்பட்ட பல ஐயங்களைக்
களையச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
இயக்கக முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர்
இரா.மதிவாணன், என் ஆசிரியர்
இராம.சுப்பிரமணியன் ஆகியோர்
உறுதுணையாயிருந்தனர். அவருக்கும் நூல்
செவ்வையாய் வெளிவர ஒத்துழைத்த அனைவர்க்கும்
பாராட்டும் நன்றியும் உரித்தாகுக!
மொழிஞா யிறெனத் தமிழகம் போற்றிடும்
விழுமிய தேவ நேயப்பா வாணர்
செந்தமிழ் மறவர்! சிந்தனை ஊற்று!
நந்தமிழ் தன்னில் நஞ்சினைக் கலக்கும்
நரிமா கலங்கிடச் செய்திடும் அரிமா!
அரிவரி கற்கும் சின்னஞ் சிறாஅரும்
நெருங்கிப் பழகிட வாய்ப்புத் தந்தவர்!
முறுக்கிய மீசை முகத்தில் திகழ்ந்திட
நறுக்காய்ப் பேசும் நல்லவர்!
பார்ப்பனப்
பொல்லார் செய்யும் சூழ்ச்சி பொறாதவர்!
நல்லார் தமக்கு நனிநல் லவரவர்!
தனித்தமிழ் வளர்க்கும் தந்தை!
இளைஞர்க்கு
இனித்த தமிழில் கட்டுரை வரைந்தவர்!
தொன்மை மொழியாம் தமிழினைக் காக்க
இன்னல் ஏற்றவர்! இன்றமிழ்ச் சொல்லின்
வேரினைக் கண்டு விரிநூல் படைத்தவர்
நூற்றாண்டு காணும் இந்நாள்
போற்றுவம் அவரின் புகழ்நிறுத் துவமே!