தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vannai


xxxii

வண்ணனை மொழிநூலின் வழுவியல்
ஞானசம்பந்தரையும் விட்டுவைத்தனரா? இல்லையே! திருமணத்தன்று அவரையும், திருமணத்திற்கு வந்த அத்துணைப் பேரையும் பந்தலில் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர். மதுரையிலுள்ள திருஞானசம்பந்தர் மடத்திற்குப் பார்ப்பனர் தலைவரா யில்லாமையே இதனை உறுதிப்படுத்தும்.
இதனுடன் அமையாது சுந்தரருக்குப் பின் மூவர் தேவாரம் அடங்கிய ஏடுகளைத் திரட்டித் தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் அறையில் வைத்துப் பூட்டினர்; தேவாரம் தமிழ்மக்களிடையே பரவாது தடுத்தனர்.
பிற்காலச் சோழப் பெருவேந்தன் முதலாம் இராசராசன், நம்பியாண்டார் நம்பி மூலம் இதனைக் கேள்வியுற்று, தில்லைவாழ் அந்தணரை அணுகிக் கேட்டான். அவர்கள் தர மறுத்தனர். தேவாரம் பாடிய மூவரும் ஒருங்கே வந்து கேட்டால்தான் தருவோம் என விடையிறுத்தனர்.
பின்னர் இராசராசன் தேவாரம் பாடிய மூவர் திருமேனியுடன் வந்து கேட்டான். வேறு வழியில்லாது அந்தணர்களும் தேவார ஏடுகள் பூட்டியிருந்த அறையைத் திறந்து காட்டினர். அந்தோ! கறையான் அரித்துப் பல்லாயிரம் பாடல்கள் அழிந்து ஒழிந்தன. எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தொகுத்தான் மன்னன். இசைஞானியார் என்னும் ஓர் ஆதி திராவிடப் பெண்ணே தேவாரத்துக்குப் பண் வகுத்தார்.

ஆங்கில அரசால் கல்விகற்று முன்னேறிய இப்போதாவது தம் செயலை விட்டார்களா? திருவையாற்றிலுள்ள தியாகராசர் அரங்கில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதால் தீட்டுப்பட்டுவிட்டது என்று தீட்டுக் கழித்தனரே! தம் குலத்தில் பிறந்த பாரதியாரையும் விடவில்லையே!

"பேராசைக் காரனடா பார்ப்பான்"
என்று தொடங்கும் பாட்டில் பார்ப்பனரின் இயல்பைப் பாரதியார் படம்பிடித்துக் காட்டுகிறார். தம் பூணூல் அறுத்து எறிந்தவராயிற்றே; ஆதிதிராவிடச் சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் அணிவித்தவராயிற்றே; பார்த்தசாரதி கோயில் யானையால் தள்ளுண்டு அடிப்பட்டு அதனாலேயே இறந்தபோது எந்தப் பார்ப்பனரும் செல்லவில்லையே; பிணந்தூக்கக் கூட ஆளில்லையே!
மதுரை அ. வைத்தியநாத அய்யரை அறியாதார் உண்டோ? பெரிய சீர்திருத்தவாதி; காந்தி அண்ணலிடம் பெருமதிப்பு வைத்திருந்தவர்; 1939-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர் சென்று வழிபடப் போராடியவர்; அதில் வெற்றியும் கண்டவர்.
முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் இளமைப் பருவத்தில் வைத்திய நாத அய்யர் வீட்டில் தங்கிப் படித்தவர். அய்யர், அவரைத் தம் மக்களுள் ஒருவராகவே கருதினார். 23.2.1955-ல் வைத்தியநாத அய்யர் மறைந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-02-2019 11:02:08(இந்திய நேரம்)