தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


முன்னுரை

கட்டபொம்மன்  காலந்தொடங்கி,  காந்தியடிகள்   காலம் வரையுள்ள
சுமார் ஒன்றரை  நூற்றாண்டினை  ,  " இந்திய விடுதலைப் போர் சகாப்தம் "
என்று  சொல்லலாம்.  இந்த நீண்ட  காலத்திலே, மொழி - சமயம் - கலை -
பொருளாதாரம் -  சமூகம்  ஆகிய  பல்வேறு துறைகளிலே நாடு மறுமலர்ச்சி
அடைந்தது . ஆனால் , இவற்றைப்   பற்றியெல்லாம்  தொகுப்பாகக்  கூறும்
வரலாற்று   நூல்  எதுவும் இதுவரை  முழு  அளவில் வெளிவந்திருப்பதாகத்
தெரியவில்லை .  இங்குமங்குமாகச்   சில   செய்திகளைத்   தரும்  நூல்கள்
ஆங்கிலத்தில்  மட்டு்மே  வெளியாகியுள்ளன .அந்த அரைகுறைச் செய்திகள்
கூடத்  தமிழ்மொழியில்  இதுவரை  நூல்  வடிவம் பெறவில்லை. விடுதலைப்
போர்  தமிழகத்திலும்  நடந்த தென்றாலும் , அந்தப் போரைப்பற்றி இதுவரை
வெளியாகியுள்ள   ஆங்கில   நூல்களிலே ,  தமிழகம் நியாயமான அளவில் 
இடம் பெற்றிருக்கிறதென்று சொல்வதற்கில்லை.

இதனால் , இந்திய விடுதலைப்  போராட்ட  காலத்திலே, தமிழினத்தார்
நிகழ்த்தியுள்ள    புரட்சிகளை -  ஆற்றியுள்ள   தியாகங்களை ஓரளவு கூட
அறிந்து   கொள்வதற்கு   இயலாத   நிலை  இன்னமும்  நீடித்து வருகிறது.
நிச்சயமாக   விடுதலைப்  போராட்ட  காலத்திலே , தமிழ்மொழியும்  அதன்
வழிப்பட்ட கலைகளும் அடைந்த மறுமலர்ச்சியினை, அந்த  மறுமலர்ச்சியைக்
காணத்  தமிழரிலே  ஆன்றோர்  பலர்   ஆற்றியுள்ள  அருந்தொண்டுகளை
ஒரு நூல் வழியாக அறிந்து   கொள்ள  தமிழக  மக்களுக்கு  வாய்ப்பில்லை.
இந்தக்  குறையை  அகற்றக்  கருதியே , "விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த
வரலாறு" என்னும் இந்நூலை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

இந்நூலை    உருவாக்குவதற்கு   மகாகவி    பாரதியாரின்  கட்டுரை
களிலிருந்து   இங்குமங்குமாக   சில   செய்திகள்  கிடைத்தன . அப்படியே,
'திரு.வி.க.வின்  வாழக்கை  குறிப்புக்கள்' என்னும்  நூலிலிருந்து சில தகவல்
களைப்  பெற்றேன் .  வ.வே.சு.ஐயரவர்கள்   ஓராண்டு   காலமே  நடத்திய
' பால  பாரதி ' என்னும்   மாத   வெளியீட்டுப்  பிரதிகளிலிருந்து அவரைப்
பற்றிய   தகவல்கள்  சிலவற்றைச்  சேகரித்துக் கொண்டேன். நாடு விடுதலை
பெற்றதை   அடுத்து    வெளியான  ' மதுரை மாவட்ட  தியாகிகள்   மலர்'
என்னும்   நூலிலிருந்தும்   அந்த    மாவட்டத்தைப்   பற்றிய   செய்திகள்
சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:35:24(இந்திய நேரம்)