Primary tabs
-
மலையருவிiv
பதிப்புரை
சிலகாலமாகத் தமிழ் நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் ஓங்கி வருகிறது. வானொலியில் அடுத்தடுத்து நாடோடிப் பாடல்களைப் பாடிவருகிறார்கள். நான் பலகாலமாக நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வருகிறேன். அவற்றின் சம்பந்தமாக நான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்குமுன் சென்னை மாகாணத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீ பர்ஸி மாக்வீன் என்னும் ஆங்கிலேயர் தமிழ் நாடோடிப் பாடல்களைத் தொகுக்கத் தொடங்கினார். ஒரு வரிக்கு இத்தனை அணா என்று பணம் கொடுத்துப் பலரிடம் பெற்றார். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் உள்ள தோட்டத் தொழிலாளிகளிடத்தும், கிறிஸ்தவர்களிடத்தும் இந்தப் பாடல்களைச் சேகரித்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
இவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சில பத்திரிகைகளில் அவர் வெளியிட்டிருக்கிறார். பின்பு இவற்றைச் சென்னைப் பல்கலைக் கழக நூல்நிலையத்துக்கு வழங்கினர். அவை நூல் நிலையத் தலைவரின் பாதுகாப்பில் இருந்தன. தஞ்சைச் சரஸ்வதிமகால் நிர்வாகிகள் அவற்றைப் புத்தக உருவத்தில் வெளியிட எண்ணி, பதிப்பிக்கும் வேலையை என்னிடம் விட்டார்கள். இத்துறையில் பலகாலம் ஈடுபட்டவனாதலின் இப்பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
பலவாறாக இருந்த பாடல்களை ஒருவாறு வகைப்படுத்தி இந்த உருவத்தில் அவற்றைப் பதிப்பித்தேன். இடக்கராக இருந்த பல பாடல்களை விட்டுவிட்டேன்.
இயற்கைச் சூழ்நிலையில் கட்டுப்பாடின்றி உணர்ச்சிவசப்பட்ட மக்கள் பாடும் பாடல்கள் ஆதலின் இவற்றைக் காட்டுமலருக்கும், மலையருவிக்கும் ஒப்பிடலாம். மலையருவி என்ற பெயர் உருவக வகையால் இந்தத் தொகுதிக்குப் பொருத்தமாக இருக்குமென்று எண்ணி அதனை அமைத்தேன்.
இப்பணியில் என்னை ஈடுபடச்செய்த தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலைய நிர்வாகிகளுக்கு என் நன்றி உரியது.
16-4-58
கி. வா. ஜகந்நாதன