Primary tabs
அவற்றிற்கீடான சரியான தமிழ்ச் சொற்களும்; 14. தெளிவுடைய தமிழ்ச் சொற்களும் அவற்றிற்கீடான கொச்சைச் சொற்களும்; 15. மக்கள், விலங்கு, புள்ளினம் முதலியவற்றின் பெயர்த்தொகுதிபோல வழங்கும் மூலிகை வகைகளைக் குறிக்குஞ் சொற்கள்; 16. மக்கள், விலங்கு, பொருள்கள் முதலியவற்றின் பெயர்த்தொகுதிபோல் வழங்கும் வானசாஸ்திரப் பொருட்களைக் குறிக்கும் சொற்கள்; 17. ரகர றகர எழுத்துக்கள் உண்மையால் பொருள் வேறுபடும் தமிழ்மொழிகள்;18. ணகர னகர எழுத்துக்கள் உண்மையால் பொருள் வேறுபடும் தமிழ்மொழிகள்; 19. லகர ளகர எழுத்துக்கள் உண்மையால் வேறுபடும் தமிழ்மொழிகள்; 20. முறையே லகரத்துக்கு ளகரத்தையும், ரகரத்திற்கு றகரத்தையும், ணகரத்துக்கு னகரத்தையும், நகரத்துக்கு னகரத்தையும் மாறுபாடாக உபயோகிக்கினும் ஒரே பொருளைத் தருபவையான தமிழ்மொழிகள்; 21. எதிரிடையான பொருள்களைத் தரும் தமிழ்ச் சொற்கள்; 22. சொல்லத்தகாத வார்த்தைகளை நயம்படவுரைக்கும் தமிழ்ச்சொற்கள்; 23. அமங்கல சந்தர்ப்பங்களையும் பொருள்களையும் மங்கலமாகக் கூறுந் தமிழ்ச்சொற்கள்; 24. பல்வேறு கூட்டத்தார் மொழியும் மறைபொருட் சொற்கள்; 25. ஓரெழுத்து மொழிகள்; 26. ஒரு சொல்லின் முதல் இடை கடைகளில் ஓரெழுத்துக்கு ஈடாக மற்றோரெழுத்துவரினும் இலக்கண முடையதாகவே வழங்குவன; 27. எழுத்துக்கள் மாறுபடினும் பொருள் வேறுபடாத சொற்களின் அட்டவணை; 28. அடிக்கடி கையாளும் பழஞ்சொற்களின் மரூஉச் சொற்கள்.
இவ்வாறு தமிழில் வழங்கும் சொற்களை இனம்பிரித்துத் தொகுத்துத் தருவதால் செந்தமிழ்ச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும், நடைமுறைச் சொற்களையும் பயில்வார் காண இயலும்.
சென்னை ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ் நிறுவனத்தார் இந்த வகையில் 4 பகுதிகளைக்கொண்ட 'தமிழமிழ்த அகராதி' என்னும் சிற்றகராதியையும் வடித்துத்தந்துள்ளனர். இதன் முற்பகுதி இரண்டு பொருளோ, இரண்டுக்கு மேற்பட்ட பொருளோ தரும் சொற்களின் அகராதியாகும். சொற்பொருளுடன் வழக்காட்சி காட்டும் எடுத்துக் காட்டும் உடன் தரப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி ஒரு சொல்லைப் பிரித்தால் இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்களைத் தரும் சொற்களின் தொகுப்பு.
'எழுத்தியல் திரியா பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பால்தெளிவு எய்தும் என்ப' - (நன். 391)
எனப் பவணந்திமுனிவர் குறிப்பிடும் தகைமையுடைய சொற்களே இவை. இசைத்திரிபாவது சொற்களை இசையறுத்துப் படித்து வேறுபாடு காண்டலாகும். 'செம்பொன்பதின்றொடி' என்பதனைச் செம்பொன் பதின் றொடி என்றும், செம்பு ஒன்பதின் தொடி என்றும் இசையறுத்துப் பிரிக்கலாம். இவ்வாறு கவர்பொருள்பட வருவனவற்றைச் சிலேடைச்சொற்கள் என்பர்.
மூன்றாவது பகுதி பெயரும் வினையுமாக வழங்கிவருகின்ற தமிழ்ச் சொற்களின் தொகுப்பு ஆகும்.
நான்காவது பகுதி அகக்கூத்து இரண்டு, அரண் நான்கு என்றாற்போல வரும் தொகைப் பெயர் விளக்கம் தருவது.
இங்ஙனமாகச் சொற்பொருள்களை நான்கு கூறுபடுத்தி உரைக்கும் இந்தச்சிற்றகராதியைச் சதுரகராதி என்றாற்போல 'நான்மைச் சொல்லகராதி' என்று குறிப்பிடலாம்.
இவ்வகையிலேயே சிற்சில மொழிக்கூறுகளைத் தனித்தனியாகத் தொகுத்து அகராதியாக அமைந்த நூல்களும் சில உள. எஸ். நடராசன் என்பார் தொகுத்த 'கார்த்திகேயினி புதுமுறை அகராதி' ண, ன பேதங்கள், ர, ற பேதங்கள், ல, ழ, ள பேதங்கள் என்னும் முத்திறப் பகுப்பின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் சிறப்பு அகராதியாகும். அறிஞர் மு. சதாசிவம் என்பார் எதிர்ப்பத அகராதி, ஒலிக்குறிப்பு அகராதி, அடுக்குமொழி அகராதி, ஐம்பொறி அகராதி முதலியவற்றை வெளியிட்டுள்ளார்.