தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

xxvii


அலுவலகம்:

சென்னையிலே மேலை மாம்பலத்தில் உள்ள என் இல்லமாகிய 'கவிமணி நிலைய' த்தில் என் நூலகப் படிப்பறையை அலுவலக அறையாகவும் அமைத்துக்கொண்டேன். முதுகலைப் பட்டம் பெற்றவர்களாகிய திரு. சிவ. பச்சையப்பன் என்பவரும் திரு. அ. நாகலிங்கம் என்பவரும் பதிப்பாசிரியர்களாக அமைந்தனர். திருமதி கலையரசி அலுவலகப் பணிகளை- குறிப்பாக எழுத்துப்பணி ஒப்புநோக்கும் பணிகளைச் செய்துவரலானார். பாடநூல் நிறுவனப் பதிப்பாசிரியர் நிறுவனச் சார்பில் அவ்வப்போது அகரமுதலிப் பணியைக் கண்காணித்து வந்ததோடு அதனை நெறிப்படுத்தி ஆக்குதற்கும் உறுதுணையாயிருந்தார்.

கருவிநூல்கள் தொகுத்தல்:

அகரமுதலிப் பணிக்காக முன்னர் வெளிவந்த சதுரகராதி தொடக்கமான பல பேரகராதிகளையும் சிற்றகராதிகளையும், மாணவர்க்கு என வெளிவந்த கையகராதி முதலியவற்றையும் ஒருங்குதிரட்டி வைத்துக்கொண்டேன். இவற்றுள் விலைக்குக் கிட்டிய நூல்களை வாங்கியும் பிறவற்றை நண்பர்களிடமிருந்து பெற்றும் நிரப்பிக்கொண்டேன். மாணவர்க்காக நிறுவனம் வெளியிட்ட பாடநூல்களையும் கலைச்சொற்கள் போன்ற சிறு வெளியீடுகளையும் சேர்த்து வைத்துக்கொண்டேன்.

அமைப்புத் திட்டம்:

அகரமுதலிக்கான அமைப்புத் திட்டம் ஒன்றை வகுத்தமைத்து நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற்றேன். இத் தொகுப்பிற்கென வரையறுத்துக்கொண்ட விதிமுறைகள் வருமாறு; இத் தொகுப்பில் பொதுவகையான எல்லார்க்கும் பயன்படத்தக்க சொற்களே எடுக்கப்பெற்றன. இலக்கிய இலக்கண வழக்குச் சொற்களும் எல்லாத் துறைகளுக்கும் பயன்படத்தக்க பொதுமைச் சொற்களும் எடுத்துக்கொள்ளப்பெற்றன.

இன்றைய வழக்குச் சொற்களுள் பல வெளிப்படையாய் எல்லார்க்கும் பொருள் விளங்கும் எனக் கருதப்படினும் தமிழ்ப் பயிற்சியில் தொடக்கநிலையில் உள்ளார்க்கும், கல்விபயிலும் மாணவர்க்கும், பிறமொழியாளர்க்கும் அவை அறிமுகமில்லாத சொற்களாயிருக்கும். எனவே, இயற்சொற்களுள்ளும் இன்றைய எளிய செஞ்சொல் வழக்குகளும் சேர்த்துக்கொள்ளப்பெற்றன.

கொச்சைச் சொற்களாகிய திருந்தாப் பேச்சும் சிதைவுச் சொற்களும் மாணவர் உள்ளத்தில் புகாமல் தடுத்தால்தான் உண்மைச் சொல்லுருவம் காண்பதில் ஊக்கம் கொள்வர். எனவே, இதில் கொச்சைச் பேச்சு, சிதைவுச் சொற்கள் ஆகியவை எடுத்துக்கொள்ளப் பெறவில்லை.

வினைச்சொற்கள் முந்திய அகரமுதலிகளிற்போலவே தொழிற்பெயர் வடிவிலேயே தரப்பெற்றுள்ளன. வினையும் பெயருமாய்ப் பொருள்பயக்கும் சொல் வடிவங்களும் பல உண்டு. அத்தகு இடங்களில் பெயர்ச்சொற் பொருளை முன்வைத்து அடுத்து வினைப் பொருள் காட்ட அச் சொல்லினை அடுத்து வளைவுக் குறிக்குள் (வி) என்னும் குறிப்புத் தந்து தனிப்பட விளக்கம் தரப்பட்டுள்ளது.

வினைவடிவ வேறுபாடுகள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்பெறவில்லை, என்றாலும் பயன்பாடு கருதி ஒருசில எச்சிவினை முதலியன எடுத்துக்கொள்ளப்பெற்றன.

தமிழில் பயின்றுவந்துள்ள வடசொற்களுள் இலக்கிய ஆட்சி பெற்றனவும் இன்றைய வழக்கில் தமிழுருவில் மாறி வழங்குவனவுமான சொற்கள் எடுத்துக்கொள்ளப்பெற்றன.

நூற்பெயர், ஆசிரியர் பெயர், காவிய மாந்தர் பெயர், ஊர்ப்பெயர் முதலிய இடப் பெயர்கள் போல்வனவாகிய சிறப்புப் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.

ஆயினும் காரணவகையால் வந்து சொற்பொருள் விளக்கவேண்டும் நிலையில் உள்ள 'அகத்தியம்' போன்ற சில சிறப்புப் பெயர்கள் மட்டும் தேர்ந்துகொள்ளப்பட்டன. 'அகத்தியம்' என்பது அவசியம், இன்றியமையாதது என்னும் பொருளில் வரும் ஒரு பெயர். இதுவே அகத்தியரால் இயற்றப்பெற்ற நூலுக்குப் பெயராகவும் அமைகிறது. இவ்வாறு பொதுப் பெயராயும் சிறப்புப் பெயராயும் வரும் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:50:51(இந்திய நேரம்)