தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   19


 

வழிக் கூறியது.

நீக்கலின் வந்த  தம்முறு  விழுமமும் என்பது, தமரை  நீக்குதலால்
தமக்குற்ற நோயின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"விளம்பழங் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் தோறும்நோவர் மாதோ
அளியரோ அளியர்என் ஆயத் தோர்என
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியுங் கலுழ்ந்தன கண்ணே"    (நற். 12)

என வரும். இஃது உடன்போக்குத் தவிர்தற்பொருட்டுக் கூறியது.

இன்னும்,   "நீக்கலின்   வந்த   தம்முறு  விழுமம் " என்றதனால்
தலைமகட்குக் கூறினவும் கொள்க.

உதாரணம்

" நாளும் நாளும் ஆள்வினை அழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழென
ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே "       (சிற்றட்டகம்)

என வரும்.

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித்
தலைப்பெயர்த்துக் கொளினும்  என்பது, மெய்ம்மையும் பொய்ம்மையும்
காணப்பட்ட அவனைச் சுட்டித் தாய்நிலை நோக்கி மீட்டுக்கொள்ளுதற்
கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி
ஈர்நறுங் கமழ்கடா அத்து இனம்பிரி ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து
பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருளில் சொல்லும் நீ சொல் லினையே
நன்னார் நறுநுதல் நயந்தனை நீவி
நின்னிற் பிரியலேன் அஞ்சல்ஓம் பென்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையே
அவற்றுள்,
யாவோ வாயின மாஅல் மகனே
கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே"
                                 (கலி. பாலை. 20)

என வரும்.

இது  தலைமகனைச்   சுட்டிக்   கூறியது.    தாய்நிலை நோக்கித்
தலைப்பெயர்த்துக் கொண்டதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

'நோய்  மிகப்  பெருகித்  தன்  நெஞ்சு கலுழ்ந்தோளை, அழிந்தது
களையென மொழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு,
என்றிவை எல்லாம் இயல்பு  நாடின், ஒன்றித்  தோன்றும் தோழிமேன
என்பது, தலைமகன் பிரிதலால் வந்துற்ற நோய்  மிகவும் பெருகித் தன்
நெஞ்சு    கலங்கியோளை   அழிந்தது  களைதல்    வேண்டுமெனத்
தலைமகன்  சொன்ன  மாற்றத்தைக்   கூறி  வன்புறையின் பொருட்டு
நெருங்கி   வந்ததன்  திறத்தோடு  இத்தன்மைய வெல்லாம்  இயல்புற
ஆராயின்   தலைமகளொடு  பொருந்தித்  தோன்றும்  தோழி மேலன
என்றவாறு.

"ஒன்றித் தோன்றுந் தோழி " என்றதனால்  தோழிமார் பலருள்ளும்
இன்றியமையாதாள் என்று கொள்க.

"தோழி தானே செவிலி மகளே" (களவியல் - 35) என்றதனான்,
அவள் செவிலிமகள் என்று கொள்ளப்படும்.

மொழிந்தது    கூறி    வன்புறை  நெருங்குதலாவது,  தலைமகன்
மொழிந்தது கூறி வற்புறுத்தலாம்.

"அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழா அய் வலிப்பல்யான் கேஎள்இனி

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே;"

எனவும்,

"இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீய்ந்த உலவையால்
துன்புறூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே;"

எனவும்,

“கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவும்
                              உரைத்தனரே;"

எனவும் அவன் மொழிந்தது கூறி,

"எனவாங்கு;
இனைநலம் உடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே "
                                (கலி - பாலை -11)

என வற்புறுத்தியவாறு கண்டுகொள்க.

என்றிவை எல்லாம் இயல்புற நாடின் "என்றதனான், பருவம் வந்தது
எனவும் பருவம் அன்று எனவும் வருவன கொள்க.

" வல்வருவர் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வச் சிறார்க்குப்பொன் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாய்த்தித்
திவளக்கான் றிட்டன தேர்ந்து"  (திணைமாலை நூற் - 66)

இது பருவம் வந்தது என்றது.

" மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மா

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:39:49(இந்திய நேரம்)