தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   22


 

தலைமகள்   தமர்   எய்தி  மீட்டுக்கொண்டு  பெயர்தல்  மரபாதலின்
அங்ஙனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்தமுற்றுக் கற்பொடு புணர்ந்த
அலர் உளப்பட அப்பகுதிப்பட்ட உடன்போக்கின் கண்ணும் அவற்குக்
கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழி, வருவரெனக் கூறலும் வந்தவழிக் கூறலும் உளவாம்.

உதாரணம்

"வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராஅரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவன்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே. "      (நற்.362)

இது வருவர் என ஐயுற்றுக்கூறியது. 'கற்பொடு புணர்ந்த கௌவை '
க்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

நாளது   சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும்,
தகுதியது   அமைதியும்,    இன்மையது    இளிவும்,   உடைமையது
உயர்ச்சியும், அன்பினது அகலமும்,  அகற்சியது அருமையும், ஒன்றாப்
பொருள்வயின்   ஊக்கிய   பாலினும்   என்பது:  நாளது   சின்மை
முதலாகச்  சொல்லப்பட்ட   எட்டனையும்  பொருந்தாத பொருட்கண்
ஊக்கிய பக்கத்தினும் அவற்றுக் கூற்று நிகழும் என்றவாறு.

'ஒன்றா'  என்னும்  பெயரெச்சம்  'பால்' என்னும்  பெயர் கொண்டு
முடிந்தது, அது 'பொருள்வயி னூக்கிய பால்'என அடையடுத்து நின்றது.

நாளது  சின்மையை  ஒன்றாமையாவது, யாக்கை   நிலையாது என
உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

இளமையது  அருமையை  ஒன்றாமையாவது, பெறுதற்கரிய இளமை
நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

தாளாண்   பக்கத்தை    ஒன்றாமையாவது,    முயற்சியான் வரும்
வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

தகுதியது  அமைதியை  ஒன்றாமையாவது,   பொருண்மேற் காதல்
உணர்ந்தோர்க்குத் தகாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை,

இன்மையது இளிவை  ஒன்றாமையாவது,  இன்மையான் வரும் இளி
வரவினைப் பொருந்தாமை.

உடைமையது உயர்ச்சியை ஒன்றாமையாவது, பொருள் உடையார்க்கு
அமைவு வேண்டுமன்றே, அவ்வமைவினைப் பொருந்தாமை: அஃதாவது
மென்மேலும் ஆசை செலுத்துதல்.

அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது, சிறந்தார்மாட்டுச் செல்லும்
அன்பினைப் பொருந்தாமை.

அகற்சியது   அருமையை    ஒன்றாமையாவது, பிரிதலருமையைப்
பொருந்தாமை.

பொருள் தேடுவார் இத்தன்மையராதல் வேண்டுமென ஒருவாற்றான்
அதற்கு இலக்கணங் கூறியவாறு.

வாயினும்   கையினும்  வகுத்த  பக்கமோடு ஊதியம்  கருதிய ஒரு
திறத்தானும்  என்பது:  வாயான் வகுத்த பக்கமோடும் கையான் வகுத்த
பக்கமோடும் பயன் கருதிய ஒரு  கூற்றானும்  அவற்குக் கூற்று நிகழும்
என்றவாறு.

வாயான் வகுத்த பக்கமாவது ஓதுதல். கையான் வகுத்த பக்கமாவது-
படைக்கலம்   பயிற்றலும்   சிற்பங்  கற்றலும்.  ஊதியங்  கருதிய ஒரு
திறனாவது மேற்சொல்லப்பட்ட பொருள்வயிற்  பிரிதலன்றி அறத்திறங்
காரணமாகப்  பிரியும்  பிரிவு.   இது  மறுமைக்கண்  பயன் தருதலின்
'ஊதியம்' ஆயிற்று.

"அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு"              (குறள் - 32)

என்பதனானும் அறிக.

புகழும்  மானமும்  எடுத்து  வற்புறுத்தலும் என்பது: பிரிந்ததனான்
வரும்  புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளை
யான் வருந்துணையும் ஆற்றியிருத்தல் வேண்டுமெனக் கூறுதற் கண்ணும்
அவற்குக் கூற்றுநிகழும் என்றவாறு.

பொருள்வயின் ஊக்கிய பாலினும் ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்
வற்புறுத்தல் எனக்கூட்டுக.

உதாரணம்

"அறனு மீகையு மன்புங் கிளையும்
புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்ந்து
தருவது துணிந்தமை பெரிதே
விரிபூங் கோதை விளங்கிழை பொருளே"

என வரும்.

தூதிடை   இட்ட  வகையினாலும்  என்பது:  இரு பெரு  வேந்தர்
இகலியவழிச் சந்து செய்தற்குத் தூதாகிச் செல்லும் வகையின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:40:22(இந்திய நேரம்)