Primary tabs


அறாஅ யாணர்ப்
பழம்பல் நெல்வின் பல்குடிப் பரவைப்
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத்
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத் தின்றுயில் பெறவே" (அகம்.44)
எனவும்,
"கேள்கேடு ஊன்றவுங் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன
பெறலரு நன்கலன் எய்தி நாடும்
செயலருஞ் செய்வினை முற்றின மாயின்
அரண்பல கடந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங் காடி நாறு நறுநுதல்
நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்றோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப
முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல்
வயந்திகழ்பு இமிழ்தரும் வாய்புகு கடாஅத்து
மீளி முன்பொடு நிலனெறியாக் குறுகி
ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே" (அகம். 93)
எனவும் வருவன நெஞ்சிற்குக் கூறியன.
"கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்படர் அன்ன செங்குழை அகந்தோ
றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்
துப்பின் அன்ன செங்கோட் டியவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க்
கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து
ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென்றோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே." (அகம்.9)
இஃது இடைச்சுரத்துச் சொல்லியது.
காவல் பாங்கின் ஆங்கு ஓர் பக்கம் என்பது காவற்பக்கத்தின்கண்
ஒரு பிரிவினும் கூற்று நிகழும் என்றவாறு.
'ஆங்கு' என்பது இடங்குறித்து நின்றது; "நின்னாங்கு வரூஉமென்
நெஞ்சினை"(கலி. பாலை.22)என்றாற் போலக் கொள்க. இது வாரியுள்
யானை காணவும், நாடுகாணவும், புனலாடவும், கடவுளரை வழிபடவும்
பிரியும் பிரிவு. ஒருபக்கம் நாட்டெல்லையிலிருந்து பகைவரைக்
காக்கவேண்டிப் பிரிவது பகைவயிற் பிரிவின் அடங்குதலின் அஃததன்
உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது.
பரத்தையின் அகற்சியின் என்பது, பரத்தையரிற் பிரியும்
பிரிவின்கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி நின்றது.
பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு
என்பது: பிரியப்பட்ட தலைமகளைக் குறுகி இரத்தலும் தெளித்தலும்
ஆகிய இரண்டு வகையோடே கூட என்றவாறு.
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகற்சியினும்
பிரியப்பட்டார் எனக் கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகற்சி
ஊடலாகாதோ வெனின், ஊடலின் மிக்க நிலையே ஈண்டுக்
கூறுகின்றதெனக் கொள்க.
கடவுள்மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள்
புணர்ச்சி மறுத்தற்குச் செய்யுள்
மருதக்கலியுள் கடவுட் பாட்டினுள்,
" வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
தண்டாத்தீஞ் சாயல் பரத்தை வியன்மார்ப
பண்டின்னை யல்லைமன் ஈங்கெல்லி வந்தீயக்
கண்ட தெவன்மற் றுரை;
நன்றும்,
தடைஇய மென்தோளாய் கேட்டீவா யாயின்
உடனுறை வாழ்க்