தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   36


 

யுடைய    குடியினது  நிலைமையைக்  கூறலும், சிறந்த கொற்றவை
நிலையும்  -  சிறந்த    கொற்றவையது    நிலைமையைக்    கூறலும்,
அ  திணை புறன் - குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சித் திணையாம்.
குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக.

உதாரணம்

"யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு"

"நாளா தந்து நறவுநொடை தொலைச்சி
இல்லக் கள்ளின் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைகவி லெறுழ்த்தோள் ஓச்சி வலன்வளையூப்
பகன்மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை." 
                           (பெரும்பாண். 134 - 146)

"முளிதலை களித்தவர் உள்ளுங் காதலில்
தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோள் இன்றென் றறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே."      (புறம்.289)

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்ஐ
யானை எறிந்து களத்தொழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டனனே;
இன்றும்,
செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே"       (புறம்.279)

இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண்முல்லை யெனவும்,
பெண்பால் பற்றி வந்ததனை மூதின்முல்லை யெனவும் கூறுப.

'கொற்றவை     நிலை'     என்றதனானே,  குறிஞ்சித்  திணைக்கு
முருகவேளே யன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்.

உதாரணம்

"ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி வலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்"     (புறப்.வெட்சி,20)
(4)

63. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு  அயர்ந்த  காந்தளும் உறுபகை
வேந்திடை தெரிதல்வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவர் ஏத்திய
ஓடாக் கழல்நிலை உளப்பட ஓடா
உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும்
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்து உரைத்தலும்
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
மனைக்குரி மரபினது கரந்தை அன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று
இருவகைப்பட்ட பிள்ளை நிலையும்
வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும்
காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட எழுமூன்று துறைத்தே.

வேலன் முதலாக  வெட்சித்திணைக்குரிய  துறை  கூறினார்;  இனி
அதற்குமாறாகிய     கரந்தைத்திணையாமாறு  உணர்த்துதல் நுதலிற்று.
அதுவும்    ஆநிரை   மீட்டல்   காரணமாக   அந்   நிலத்தின்கண்
நிகழ்வதாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று.

வெறியாட்டயர்ந்த     காந்தளும்  என்பது  முதலாகத் தலைத்தாள்
நெடுமொழி   தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:42:58(இந்திய நேரம்)