தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   43


 

அருஞ்சமந் தாங்கி முன்னின்று எறிந்த
ஓருகை இரும்பிணத்து எயிறுமிறை யாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்குஇரிந் தானைப் பெயர்புற நகுமே."       (புறம்.284)

இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி.

"உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்
யாரிவண் நெடுந்தகை வாழு மோரே"        (பதிற்றுப்.71)

என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழி வஞ்சி.

கழி  பெருஞ்  சிறப்பின்  பதின்மூன்று துறை -    மிகப்  பெருஞ் சிறப்புடைய பதின்மூன்று துறைத்தாம்.

வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்த  ஏனையவெல்லாம்
இரு  திறத்தினர்க்கும்  பொதுவாக  நிற்றலின்  கழிபெருஞ் சிறப்பெனக்
கூறினார். இன்னும்     "கழிபெருஞ்சிறப்பின்"  என்றமையின், பேரரசர்
துணையாக வந்த   குறுநில    மன்னரும்   தாமும்   பொலிவெய்திப்
பாசறை    நிலை   உரைத்தலும் பிறவும்   கொள்க.   இவைபற்றியன
துணைவஞ்சி. "நீயே புறவின் அல்லல்"  (புறம்.46)  "வள்ளியோர்ப்
படர்ந்து"  (புறம்.47)
 என்னும்   புறப்பாட்டுகளில்  காண்க. பிறவும்
அன்ன.                                                  (7)

66. உழிஞை தானே மருதத்துப் புறனே
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப.

இஃது உழிஞைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உழிஞை மருதத்துப் புறன் -  உழிஞை என்னும் புறத்திணை மருதம்
என்னும்   அகத்திணைக்குப்   புறனாம்.   முழு   முதல்    அரணம்
முற்றலும்  கோடலும்    அனைநெறிமரபிற்று      ஆகும்  -    அது
முழுமுதல்  அரணம் முற்றுதலும்       அழித்தலுமாய்         வரும்
தன்மைத்தாகிய  நெறியை  மரபாக உடைத்து.

'முதல்    அரணம்' என்றதனான் தலையும் இடையும் கடையும் என
மூவகைப்படுமவற்றுள்       தலையரண்.   அஃதாவது,   அரணிற்குக்
கூறுகின்ற இலக்கணம்   பலவும்   உடைத்தாதல்.   மருதத்திற்கு  இது
புறனாயவாறு  என்னையெனின்,    வஞ்சியிற்    சென்ற வேந்தனொடு
போர்செய்தல் ஆற்றாது   உடைந்து     மாற்றுவேந்தன்      அரண்
வலியாகப்  போர்  செய்யு மாகலானும்,  அவர்   நாட்டகத்தாகலானும்,
அவ்வழிப்  பொருவார்க்கு  விடியற்பொழுது காலமாகலானும்,   அதற்கு
இது  புறனாயிற்று.  நாட்டெல்லையின்  அழிப்பு     உழிஞையாகுமோ
எனின்,  அது  பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின்    வெட்சியும்
ஓதின ஊர்க்கொலை [புறத்திணை.3] யுள் அடங்கும்.              (8)

67. அதுவே தானும் இருநால் வகைத்தே.

இஃது, உழிஞைத்திணையை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

அதுதான்    இருநால்   வகைத்து  -  உழிஞைத்துறைதான் எட்டு
வகைத்து.

அவையாமாறு முன்னர்க் காணப்படும்.   [ஏகாரமும்    உம்மையும்
அசைகள்.]                                               (9)

68. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற் றிவர்தலுந் தோலது பெருக்கமும்
அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறற்பட
ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர்
வருபகை பேணார் ஆரெயில் உளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.
இதுவும், உழிஞையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச்   சொல்லப்பட்டன
உழிஞைத் துறையாம்.

கொள்ளார்    தேஎம் குறித்த கொற்றமும் - பகைவரது தேயத்தைக்
கொள்ளக் குறித்த கொற்றமும்.   [கொள்ளார்   தன்னை  இறையெனக்
கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும்;]

உதாரணம்

"ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்கும் கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
புரைதீர்ந்து அன்றது புதுவதோ அன்றே
தண்புனல் பூசல் அல்லது நொந்து
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:47:29(இந்திய நேரம்)