தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   519


என்பது,   தொழிலிற்   பிரிந்த   பெண்  ஒழி மிகுசொல். ‘யானை
நடந்தது.’-  இது,  தொழிலிற்  பிரிந்த  ஆண்  ஒழி மிகுசொல். இவை
அஃறிணைக்கண்    பெயரானும்   தொழிலானும்   பிரிந்தன.   இவை
இருபாற்கும் பொதுவாயினும், ஒருபாற்கண் தாமே பிரிந்தன. 

‘இவர் பெரிதுஞ் சொல்லுமாறு வல்லர் இவர் பெரிதுங் கால்கொண்டு
ஓடுவர்,’ எனத் தொழிலின் மிகுதி விளக்கி வருவனவுங் கொள்க. (50) 

திணை விரவி எண்ணப்பட்ட பெயர் முடிபு

51. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.
 

இது, திணைவழு அமையுமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) பலவயினானும்   எண்ணுத்திணை  விரவுப்பெயர்  -   பல
இடத்தும்   திணைவிராய்   எண்ணப்பட்ட   பெயர்,   செய்யுளுள்ளே
அஃறிணை முடிபின - செய்யுளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்
சொற் கொண்டு முடியும், எ-று. 

‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை என்றிவை ஆறும்
குறுகார் அறிவுடை யார்.’

(நன். சூ. 378 உரை)

‘கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவருமென
நான்குடன் மாண்ட தாயினும்’

(புறம்.55 : 7 - 9)

என வரும். 

‘பலவயினானும்’  என்றமையான்,  சிலவயினான்  திணை  விரவாது
உயர்திணையான்  எண்ணி அஃறிணையான் முடிவனவும், திணைவிராய்
எண்ணி உயர்திணையான் முடிவனவுங் கொள்க. 

‘பாணன் பறையன் துடியன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியும் இல்லை.’

(புறம். 335 : 7,8)

என்றது,   ‘பாண்குடி,   பறைக்குடி’  எனக்  குடியைச்  சுட்டி நில்லாது
‘பாணன்,  பறையன்’  எனப்  பால்  காட்டி  நிற்றலான்,  உயர்திணைப்
பொருள் நின்று அஃறிணை முடிபு கொண்டனவேயாம். 

‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார்

   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:21:55(இந்திய நேரம்)