தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   601


தொழிற்பெயர் அல்லா ‘ஆர்’ ஈறுகளும் ஈரோடு  ஏகாரம் பெறுதல்
கொள்க. 

(எ-டு.) நம்பியார்-நம்பியீரே! கணியார்-கணியீரே! என வரும். 

இன்னும்  இதனானே ‘அர்’ ஈறு வந்தவரே!  சென்றவரே! என ‘ஈர்’
பெறாது ஏகாரம் பெற்று வருதலுஞ் சிறுபான்மை கொள்க. (22) 

அவ்வீற்றுப் பண்புப் பெயர்

142. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. 

இஃது, எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தது. 

(இ-ள்.)  பண்பு கொள் பெயரும் அதனோரற்றே-அவ்விரண்டீற்றுப்
பண்பு  கொள்  பெயரும்  அவ்வீற்றுத்  தொழிற்பெயர்போல  ஈரோடு
சிவணியும், சிறுபான்மை ஈரோடு ஏகாரம் பெற்றும் ஈர் பெறாது ஏகாரம்
பெற்றும் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.) கரியர் - கரியீர்!  இளையர்  - இளையீர்! எனவும், கரியீரே!
இளையீரே! எனவும், கரியவரே! இளையவரே! எனவும் வரும். 

இனி,  ‘தன்னினம் முடித்தல்’  என்பதனான், ‘சீவகசாமி’ (சீவக. 665)
என்னும்  இருபெயரொட்டுப்  பண்புத்தொகை,  ‘சீவக  சாமியார்’  என
‘ஆர்’  ஈறாய்ச்  ‘சீவக  சாமியீரே!’  (சீவக. 1913) என ஈரோடு ஏகாரம்
பெறுதல் கொள்க. (23) 

அவ்வீற்று அளபெடைப் பெயர் 

143. அளபெடைப் பெயரே அளபெடை இயல. 

இஃது, எய்தாதது எய்துவித்தது. 

(இ-ள்.)  அளபெடைப்  பெயரே  அளபெடை  இயல-ரகார  ஈற்று
அளபெடைப்  பெயர்  னகார  ஈற்று  அளபெடைப் பெயர்போல (137)
மாத்திரை மிக்கு இயல்பாய் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.) சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகா அ அர்!’(புறம்.291:1) என
வரும்.   அவ்வளபெடைகள்   செய்யுளுள்  குறைந்து  வந்தன,  சந்த
இன்பம் நோக்கி விகாரத்தாற் குறைந்து வந்தன என்று கொள்க. (24) 

ரகார ஈற்றுள் விளி ஏலாதவை 

144. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. 

இது, விளி ஏலாதன கூறுகின்றது. 

(இ-ள்.) சுட்டு முதற்பெயரே முன் கிளந்தன்ன-அவர்,  இவர், உவர்
என்னும் ரகார ஈற்றுச் சுட்டு முதற்பெயர் னகார ஈற்றுச்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:37:12(இந்திய நேரம்)