தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2287


பொய்த லாடிப் பொலிகென வந்து
நின்னகாப் பிழைத்த தவறோ பெரும
கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித்
தணிமருங் கறியாள் யாயழ
மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே’’   (அகம்.156)

இது   தலைவியைத்   தோழி  யிடத்துய்த்துத் தலைவனை வரைவு
கடாயது. இவ்வகப்பாட்டும் அது.

இன்னும்,  ‘மயக்குறுதலும்’ என்றதனான் அவ்வந் நிலங்கட்கு உரிய
முதலுங்  கருவும் வந்து உரிப்பொருள் மயங்குவனவுங் கொள்க. அஃது
‘‘அயந்திகழ் நறுங்கொன்றை’’  (கலி.150)  என்னும்  நெய்தற் கலியுட்
காண்க.    இக்கருத்தானே   நக்கீரரும்   ஐந்திணையுள்ளுங்   களவு
நிகழுமென்று கொண்டவாறுணர்க.

இனிக்    காலம் ஒருங்கு மயங்குங்காற் பெரும்பொழுது இரண்டும்
பெரும்பான்மையுஞ் சிறுபான்மை சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க.

‘‘மழையில் வான மீனணிந் தன்ன
குழையமன் முசுண்டை வாலிய மலர
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய சூடிய கவர்கோற் கோவலர்
எல்லுப் பெயலுழந்த பல்லாநிரையொடு
நீர் திகழ் கண்ணியர் ஊர்வயிற் பெயர்தர
நனிசேட் பட்ட மாரி தளிசிறந்
தேர்தரு கடுநீர் தெருவுதொ றொழுகப்
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்
கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர்
நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை
யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக்
காய்சின யானைக் கங்குற் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.’’      (அகம்.264)

இது தோழிக்குத் தலைவி கூறியது.

இம் மணிமிடைபவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது.

‘‘மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப்
புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக்
காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத்
துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை
நெய்தோய்த் தன்ன நீர்நனையந்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம்பூப் பயில அகல்வயற்
கதிர்வார் காய்நெல் கட்கினி திறைஞ்சச்
சிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாட்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நந்நோ யறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்லென
ஆனா தெறிதரும் வாடையொடு
நோனேன் தோழியென் தனிமை யானே’’    (அகம்.294)

இது பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.

இம் மணிமிடைபவளத்து  முல்லையுள்  முன்பனி வந்தது. நிலமுங்
கருவும் மயங்கின.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:54:55(இந்திய நேரம்)