Primary tabs

யாகலின் இருத்தலை அதன்பின் கூறி, அங்ஙனம் ஆற்றியிராது
தலைவனேவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை
தலைமகளதே யாதலின் அவ் விரங்கற்பொருளை அதன்பிற் கூறி,
இந்நான்கு பொருட்கும் பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறத்த லானும்
ஊடலை அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார்.
நான்கு
நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் முற்பட்ட புணர்ச்சியே
புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று
அதனை முற்கூறினார்.
அவை இயற்கைப் புணர்ச்சியும்
இடந்தலைப்பாடும் பாங்கற்கூட்டமுந்
தோழியிற்கூட்டமும் அதன்
பகுதியாகிய இருவகைக் குறிக்கண்
எதிர்ப்பாடும் போல்வன.
தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும்,
ஆண்டுத் தோழி கூறுவனவுங்
குறை நேர்தலும் மறுத்தலும் முதலியன
புணர்ச்சி நிமித்தம்.
இனி, ஓதலுந் பகையும் தூதும் (25) அவற்றின் பகுதியும்
பொருட்பிரிவும் உடன்போக்கும் பிரிவு. ‘ஒன்றாத்
தமரினும்
பருவத்துஞ் சுரத்துந் தோழியொடு வலித்தன்’ (41)
முதலியன
பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவனவுந்
தோழி
யாற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னொருகாற்
பிரிதற்கு
நிமித்தமாம், அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின்.
இனித் தலைவி,
பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றிருத்தலும்,
பிரிந்துழிக் குறித்த பருவ மன்றென்று தானே கூறுதலும், பருவம்
வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவனவும்
போல்வன
இருத்தல். அப் பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன முல்லை
சான்றகற்பு அன்மையிற் பாலையாம். இனிப் பருவங்கண்டு தலைவி
ஆற்றாது கூறுவனவும், தோழி பருவமன் றென்று வற்புறுத்தினவும்,
வருவரென்று வற்புறுத்தினவும், தலைவன் பாசறைக்கண் இருந்து
உரைத்தனவும்,
அவைபோல்வனவும்
நிமித்தமாதலின்
இருத்தனிமித்தமெனப்படும்.
இனிக் கடலுங்
கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும்,
தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்
துணைப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல்
முதலியனவும், தலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம்.
புலவி முதலியன ஊடலாம்.
பரத்தை, பாணன் முதலியோர்
ஊடனிமித்தமாம்.