Primary tabs

இனி அவ்வந் நிலத்து மக்களே
தலைவராயக்கால் அவை
உலகியலேயாம்.
இனிக் கைக்கிளையுள்
ஆசுரமாகிய ஏறுகோடற் கைக்கிளை,
காமப்பொருளாகிய புலனெறிவழக்கில் வருங்கால், முல்லை நிலத்து
ஆயரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி
வரையுங்காலத்து, அந்நிலத்தியல்பு பற்றி ஏறுதழுவி வரைந்து
கொள்வரெனப் புலனெறி வழக்காகச் செய்தல் இக்கலிக்குரித்தென்று
கோடலும் ‘பாடலுள் அமையாதன’ என்றதனாற் கொள்க. அது
‘‘மலிதிரையூர்ந்து’’
என்னும் முல்லைக்கலியுள் (4) ‘‘ஆங்க ணயர்வர்
தழூஉ’’ என்னுந் துணையும் ஏறு தழுவியவாற்றைத் தோழி
தலைவிக்குக் காட்டிக் கூறிப், ‘‘பாடுகம்
வம்மின்’’ என்பதனாற்
றலைவனைப்
பாடுகம்
வாவென்றாட்கு, அவளும்
‘‘நெற்றிச்சிவலை
...மகள்’’ ‘‘ஒருக்கு
நாமாடு...மகன்’’
என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவாறும்,
அவற்றான் வருந்தியவாறுங்
கூறிப் பாடியபின்னர்த், தோழி,
‘‘கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை யுச்சி மிதித்து’’
(கலி.104)
என எமர்கொடை நேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க.
இவ்வாறே
இம்முல்லை நிலத்து அகப்பொருளொடு கலந்து வருங்
கைக்கிளை பிறவுமுள; அவையெல்லாம் இதனான் அமைத்துக்
கொள்க. புனைந்துரைவகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லனவுங்
கூறுபவாலோவெனின்,
உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்
குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக்கருதி,
அந்நல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி,
யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது
வழக்கென்பா ராயிற்றென்பது.
இவ்வதிகாரத்து நாடகவழக்கென்பன,
புணர்ச்சி உலகிற்குப்
பொதுவாயினும், மலைசார்ந்து நிகழுமென்றுங், காலம் வரைந்தும்,
உயர்ந்தோர் காமத்திற் குரியன வரைந்தும், மெய்ப்பாடுதோன்றப்
பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்காம். இக்கருத்தானே
‘முதல்கருவுரிப்பொரு ளென்ற மூன்றே -நுவலுங் காலை’ (தொல். பொ.
அகத். 3) என்று புகுந்தார் இவ்வாசிரியர்.
இப்
புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரா னாட்டப்பட்ட
தென்னமோவெனின்,