தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3325


பகலும்  பலகாலும் தாம்   ஏறி  அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக்
கொன்ற கொற்றமும்;

உ-ம்:

‘‘நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத்
தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக்
கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து
முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை
வென்றியது முடித்தனர் மாதோ
யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே’’

என வரும்.

‘‘யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி
னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்’’
        (பதிற்றுப்.15)

என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற்படும்.

மாராயம்    பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப்பெய்திய
அதனாற்   றானேயாயினும்   பிறரேயாயினுங்   கூறும்  மீக்  கூற்றுச்
சொல்லும்;

சிறப்பாவன  ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் ஊரும்
முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேண்டியவாறு செய்க
என்றது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)