தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3795


னவும்     ‘‘ஆலஞ்  சேரி மயிந்த.... னூருண்  கேணிநீ ரொப்போன்’’
எனவுஞ்     சான்றோர்      செய்யுட்செய்தார்.     உருவப்பஃறேர்
இளஞ்சேட்சென்னி   அழுந்தூர்வேளிடை   மகட்கோடலும்   அவன்
மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர்வேளிடை மகட் கோடலுங்
கூறுவர்.

இதனானே,

‘‘பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின் 
                (புறநா.35)

எனவும்,

‘‘ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பாரமோம்பி’’ 
           (பதிற்றுப்.13)

எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க.

உ-ம்:

‘‘வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனிநாளே தனித்து’’

என வரும்.                                            (30)

வேதத்தினாற் பிறந்த நூல்களும் நால்வகை
வருணத்தார்க்கும் உரியவாதல்
 

31.
உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான.
 

இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)    ஓத்தின் ஆன - வேதத்தினாற் பிறந்த வட நூல்களுந்
தமிழ்நூல்களும்;   உயர்ந்தோர்க்கு   உரிய   -   அந்தணர்  அரசர்
வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய எ-று.

அவை   சமயநூல்களும்  ஒன்றற்கொன்று மாறுபாடு கூறுந் தருக்க
நூல்களும்  தருமநூல்களும்  சோதிடமும்  வியாகரணம் முதலியனவும்
அகத்தியம்   முதலாகத்   தோன்றிய   தமிழ்நூல்களுமாம்.   வேதந்
தோன்றிய    பின்னர்   அது   கூறிய   பொருள்களை   இவையும்
ஆராய்தலின்  ‘ஓத்தினான’  வென்று  அவற்றிற்குப் பெயர் கூறினார்.
ஓத்தென்பது வேதத்தையே யாதலின்.                        (31)

வேந்தண்தொழில் வேளிர்க்கும் உரித்தெனல்
 

32. 

வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய
ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே.
 

இது   மலய    மாதவன்    நிலங்கடந்த  நெடுமுடியண்ணலுழை
நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்
வேந்தன் றொழில் உரித்தென்கிறது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:40:14(இந்திய நேரம்)