தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5080


கொள்ளினும்     அமையும்.    ஈண்டு   மாய்ந்த  மகனென்றதூஉஞ்
சுற்றப்படுவானை   அறிவித்தற்கே;   ஆண்பாலும்  உடன்கூறியதன்று.
மேலனவற்றிற்கும் இஃதொக்கும்.

உ-ம்:

‘‘இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்
புரவலன் மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க
வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா
தோற்கண்ண போலுந் துடி’’

         (தகடூர் யாத்திரை.புறத்திரட்டு.1438.இரங்கல்.3)

என வரும்.

‘‘மீனுண்  கொக்கின்  றூவியன்ன’’ என்னும் (277) புறப்பாட்டும்
அது.

தாமே  ஏங்கிய   தாங்கரும்   பையுளும்  - அச்சுற்றத்தாருமின்றி
மனைவியர்தாமே   தத்தங்   கொழுநரைத்   தழீஇயிருந்து  அழுதது
கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்;

தாமே  யெனப்  பன்மை  கூறினார்,   ஒருவர்க்குத்   தலைவியர்
பலரென்றற்கு, ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை.

இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது.

‘‘மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப்
புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை
இருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை
யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து
வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக
லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை
யவரின்று நிகழ்தரு முறவே யதனா
லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி
நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச்
சேணிடை யகன்ற துயிலே யதுவினி
யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள்
வாரா தாயினுய் யாதாங் கொல்லோ
மெலிந்து மெலியுமென் யாக்கையிற்
கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே’’

என வரும்.

‘‘கதிர்மூக்  காரல்  கீழ்ச்சேற் றொளிப்ப’’ என்னும் (349) புறப்பாட்டும் அது.

‘தாமே  யேங்கிய’     என்பதற்குச்     சிறைப்பட்டார்    தாமே
தனித்திருந்ததென்று கூறிக்,

‘‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணு மளவை
யீன்ம ரோவிவ் வுலகத் தானே.’’             (புறம்.74)

என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர்.

கணவனொடு   முடிந்த  படர்ச்சி  நோக்கிச்  செல்வோர் செப்பிய
மூதானந்தமும்  -  மனைவி  தன்  கணவன்  முடிந்தபொழுதே உடன்
முடிந்து  போகிய  செலவுநினைந்து  கண்டோர்  பிறர்க்  குணர்த்திய
மூதானந்தத்தானும்;

ஆனந்தம் -  சாக்காடு.  முதுமை  கூறினார்,  உழுவலன்பு  பற்றி.
இப்படி யிறத்தலின் இது யாக்கை நிலையின்மை.

உ-ம்:

‘‘ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க்
கீருயி ரென்ப ரிடைதெரியார் - போரில்
விடனேந்தும் வேலாற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்’’      (பு. வெ. சிறப்பிற் பொது.9)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:46:46(இந்திய நேரம்)