தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5296


 

நெடுவேள் நல்குவ னெனினே
செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
கான்கெழு நாடன் கேட்பின்
யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே.”       (அகம்.98)

‘இன்னாவாக்கி நிறுத்த எவ்வ’ மென்பது  அவன்வயிற் பரத்தைமை.
‘உயிர்வாழ்தல் அரிது’  என்பது  தன்வயினுரிமை. அவை வெறியஞ்சிய
வழி நிகழ்ந்தன.

குறியின்  ஒப்புமை  மருடற் கண்ணும் - இரவுக்குறி வருந்தலைவன்
செய்யுங்குறி பிறிதொன்றனான் நிகழ்ந்து  தலைவன் குறியை  ஒத்தவழி,
அதனை மெய்யாக உணர்ந்து தலைவி  மயங்கிய  வழியும்: புனலொலிப்
படுத்தன் முதலிய அவன் செயற்கையானன்றி இயற்கையான் நிகழ்ந்துழிக்
குறியினொப்புமையாம்.

உ-ம்:

“மெய்யோ வாழி தோழி சாரன்
மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை
யாற்றப் பாயாத் தப்ப லேற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனஎன் தடமென் றோளே.”        (குறுந்.121)

கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு  பாய்ந்து  அதனை முறித்த
முசுப்போல, நாங்  குறிபெறுங் காலத்து  வாராது  புட்டாமே  வெறித்து
இயம்புந்துணையும் நீட்டித்துப் பின்பு   வருதலிற்,   குறிவாயாத்  தப்பு
அவன்மேல் ஏற்றி, அதற்குத் தோள் பசந்தனவென்று,  பின்னொருநாள்
அவன் வந்துழித் தோழியை   நோக்கி  இவ்வரவு  மெய்யோவெனவே,
அவ்விரண்டும் பெற்றாம்.

“அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட
மணியரவம் என்றெழுந்து போந்தேன் - கணிவிரும்பு
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் யான்.”           (ஐந்.ஐம்.50)

இதுவும் அது.

வரைவு  தலைவரினும்   -  களவு  வெளிப்பட்ட   பின்னராயினும்
வெளிப்படு   முன்னராயினும்  வரைந்தெய்துதற்  செய்கை   தலைவன்
கண்  நிகழினும்  ஆண்டு  முற்காலத்து   நிகழ்ந்த  ஆற்றாமை  பற்றி
அவ்விரண்டுங் கூறும்:

உ-ம்:

“நன்னா டலைவ ருமெல்லை நமர்மலைத்
தந்நாண்டாந் தாங்குவார் என்னோற் றனர்கொல்;
புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ
நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ”          (கலி.39)

என நாண் தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங், கனவிற் புண
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:28:36(இந்திய நேரம்)