தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5418


 

கேட்டவழிக் கூறியன.

“நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையாரென்
ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர்
எண்ணுவ தெவன்கொல் அறியே னென்னும்.”     (கலி.4)

இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று

“பலர்புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளிச்
செலவுநீ நயந்தனை யாயின் மன்ற
இன்னா வரும்படர் எம்வயிற் செய்த
பொய்வ லாளர் போலக்
கைவல் பாணவெம் மறவா தீமே.”         (ஐங்குறு.473)

இது, தூதுவிடக் கருதிக் கூறியது.

“சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்
டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் ஈட்டிய பொருளே.”        (ஐங்குறு.317)

இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது.

“மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவ லென்னும்
நன்றா லம்ம பாணன தறிவே.”            (ஐங்குறு.474)

இது பாணனைத் தூதுவிட்டுக் கூறியது.

“புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி யருவியின் தோன்று நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
நயந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
தாமணந் தனையமென விடுகந் தூதே.”       (குறுந்.106)

இது, தூதுகண்டு கூறியது.

“ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவின் நுண்டாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.”     (குறுந்.46)

இது, சென்ற நாட்டு இவை இன்று கொலென்றது.

“வாரா ராயினும் வரினு மவர்நமக்
கியாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
றின்னா தெறிவரும் வாடையொடு
என்னா யினள்கொ லென்னா தோரே.” (குறுந்.110)

இது, பருவங்கண்டு அழிந்து கூறியது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:52:24(இந்திய நேரம்)