Primary tabs


மையினையுடைய வாயில்களுக்குரிய, என்றவாறு.
அன்னபிறவாவன, அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான்
தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ் வுறுத்தலுங்,
காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு மதிக்கப்படுதலும் போல்வன.
புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு
முகம்புகன் முறைமையின்மையின்.
உ-ம்:
“கடல்பா டவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப்
பகலு நம்வயின் அகலா னாகிப்
பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்பன்
இனியே, மணப்பருங் காமந் தணப்ப நீந்தி
வாரா தோர்நமக் கியஅரென் னாது
மல்லன் மூதூர் மறையினை சென்று
சொல்லி னெவனோ பாண எல்லி
மனைசேர் பெண்ணை மடல்வாய் அன்றில்
துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக்
கண்ணிறை நீர்கொடு கரக்கும்
ஒண்ணுதல் அரிவையா னென்செய்கோ வெனவே.”(அகம்.50)
இதனுட் காமமிகுதியாற் கண்தாமே அழவுங் கற்பிற்கரக்கு
மெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி பாணற்குக் கூறினாள்,
அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. ‘இனி’
என்றதனாற் கற்புப் பெற்றாம்.
தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க.
‘வாயி லுசாவே தம்முளு முரிய’ (தொல்.பொ.512) என்பதனால்
தலைவற்கு உரையாமல் தம்முட் டாமே உசாவு வனவும்
ஈண்டே கொள்க.
“அணிநிற வெருமை யாடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வூரன் பாயலின் றுணையே.” (ஐங்குறு.96)
இது, கற்புக் கூறியது.
“முளிதயிர் பிசைந்த” (குறுந்.167) என்பது அடிசிற் றொழிலின்கண்
மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது.
“கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பிழைமை பயனோக்கிக் கொல்லோ - கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாருட் கேளா
அடிநாயேன் பெற்ற வருள்.”