தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5453


 

நாள்யான் கண்மாறக் குறிபெறாஅன்
புனையிழாய் என்பழி நினக்குரைக்குந் தானென்ப
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்தன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக”     (கலி.46)

எனத்   தோழி    சொல்லெடுப்பதற்குத்   தலைவி   சிறுபான்மை
கூறுதலும் ஈண்டு ‘உரிய’வென்பதனாற் கொள்க.

“யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான் - தேனூறுங்
கொய்தார் வழுதிக் குளிர்சாந்த தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு.”              (முத்தொள்.104)

இதனுள்  யானுணர்த்தத்   தானுணரானெனப்     பாடாண்திணைக்
கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க. (16)

தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல்

158. பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.

இது,     சொல்லத்தகுங்     கிளவியேயன்றிச்     சொல்லத்தகாக்
கிளவியுந்    தோழி     கூறுமென   எய்தியதன்மேற்     சிறப்புவிதி
உணர்த்துகின்றது.

(இ-ள்.)  பரத்தைமை   மறுத்தல்   வேண்டியும் -      தலைவன்
படிற்றுள்ளத்தாற்   புறத்து    ஒழுகும்    ஒழுக்கத்தைப்   போக்குதல்
விரும்பியும்; கிழத்தி மடத்தகு  கிழமை உடைமையானும்   -   தலைவி
அவன்   பரத்தைமை  அறிந்தேயும்  அவன் கூறியவற்றை மெய்யெனக்
கொண்டு  சீற்றங்கொள்ளாது ஒழுகும்    மடனென்னுங்    குணத்திற்கு
ஏற்றன     அறிந்தொழுகும்   உரிமையுடையளாகிய   எண்மையானும்;
அன்பிலை  கொடியை   என்றலும் உரியள்  -  தலைவனை அன்பிலை
யென்றலுங் கொடியை யென்றலுமுரியள் தோழி எ-று.

கொடுமை      கடையாயினார்    குணம்.    களவினுள்    தன்
வயினுரிமையும்       அவன்வயிற்     பரத்தைமையுங்    கோடலின்
இதற்குப்  பரத்தைமை  மறுத்தல் கொள்க.

உ-ம்:

“கண்டவ ரில்லென உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகலின்
வண்பரி நவின்ற வயமான் செல்வ
நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தால்
அன்பிலை யெனவந்து கழறுவல் ஐயகேள்;
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:59:16(இந்திய நேரம்)