தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

வடலுர் இராமலிங்க அடிகள்

(1823 – 1874)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

சிதம்பரம் மருதூர் இராமைய பிள்ளைக்கும் அவரது ஆறாவது மனைவியான சின்னக்காவணம் சின்னம்மையாருக்கும் 5-10-1823 இல் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர். இவரது தமையன்மார் சிதம்பரம் சபாபதிப் பிள்ளை, பரசுராமப் பிள்ளை என்பவர்கள் காஞ்சிபுரம் சபாபதி முதலியரிடத்தில் கல்வி பயின்று வந்தனர். இராமலிங்கத்தை இளமையிற் புலவரிடம் கற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தியும் அவர் அதில் விருப்பமின்றி இருந்து விட்டார். ஆனால் பிற்காலத்தில் ஒரே முனைப்பாய் நின்று உறுகித் திளைத்துக் கற்றவராகிப் பாடல்கள் இயற்றுவதில் மிகுதியும் ஈடுபாடு கொண்டார்.

தமது ஒன்பதாவது வயதில் சென்னைக் கந்த கோட்டத்திற்குச் சென்று நாள்தோறும் முருகனை வழிபட்டுப் பாடியவைதாம் கந்தர் சரவணப்பத்தும், சண்முகர்கும்மியும், சண்முகர் காலைப்பாட்டும் தெய்வமணி மாலையும் ஆகும். இவர் தமது பன்னிரண்டு வயதிற்குள் கல்வி தேர்ச்சியடைந்து நற்பழக்கங்களை வளர்த்துக் கொண்டு நன்னெறியில் நிற்கலானார். கந்தகோட்டத்திற்கும் திருவெற்றியூருக்கும் திருத்தணிகைக்கும் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இராமலிங்கர் இளமை முதலே இரக்க உணர்ச்சி மிக்கவராகவும், பொருள் இச்சை அற்றவராகவும் விளங்கினார். தமது இருபதாம் வயதில் தில்லைச் சிற்றம்பலம் சென்று நடராசரை வணங்கி வந்தார். ஆராவாரமிக்க சென்னையைவிட அடக்க ஒடுக்க அமைதியுடன் இருந்த தமது பிறந்த இடமான கருங்குழியைத் தமக்கு ஏற்ற உறைவிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இங்கிருந்து பல ஊர்களுக்கு நடந்து சென்றே ஆங்காங்கே பல விரிவுரைகளைச் செய்து வந்தார். தம் உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளைப் பாவடிவாகப் பாடி வந்தார். இவர் எல்லா உயிர்களிடத்தும் மரஞ்செடி கொடிகளிடத்தும் ஒரே மாதிரியான அன்பைச் செலுத்தி வந்தார். அவைகளுக்குள் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. நாளடைவில் சாதி, மதம், சமயம், வருணம், நாடு, மொழி காலம், பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் இவை போன்ற தடைகளை அறவே ஒழித்தால்தான் ஆன்மநேய ஒருமைப்பாடு கிட்டும் என்பதைத் தெரிந்து கொண்டார்.

ஆகவே, சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிரிகளிடத்தும் ஒரே அன்பு செலுத்துதல், பசிப்பிணியை அடியோடு அகற்றல் நன்னெறியில் நடத்தல் ஆகியவற்றை அவரது குறிக்கோளாகக் கொண்டார். இவரது ஒழுகலாறுகளைக் கூர்ந்து கவனித்தவர்களும் இவரைத் திருவருட் பிரகாச வள்ளலார் என்று அன்பான அடைமொழி கொடுத்து விரும்பி அழைத்து வந்தனர்.

இராமலிங்க அடிகள் வடலூரில் முதன் முதலாக ஓர் அறக்கூழ்ச்சாலை தருமசாலையை அமைத்தார். பசிக் கொடுமையைப் போக்க முற்பட்டார். மக்களிடையே எழும் வயிற்றுப் பசியை ஓரளவு நீக்கிய பின்பு அறிவின்மையையும், மயக்கத்தையும் போக்க அவர் பொதுமன்றக் கல்விக்கழகம் சமரச வேத பாடசாலை என்ற மற்றோர் அமைப்பைக் கண்டார். அடுத்து அங்கே அறிவு மன்றம் (ஞானசபை) ஒன்றையும் நிறுவினார்.

மண்ணிலோ, கல்லிலோ உலோகத்திலோ, உருவ வழிபாடு இருப்பது ஒவ்வாதெனக் கருதிய இராமலிங்கர் தீக்கொழுந்தான சோதியையே வடலூர் ஞானசபையில் இருக்கச் செய்து அதன் வாயிலாக மக்களை வழிபடுமாறு பணிந்தார். இங்கு அருட்பெருஞ்சோதி அகவலை (1596 – அடிகள் கொண்டது) ஒரே இரவில் பாடித் தம் சுரத்தாலே எழுதிக் கொடுத்தாராம்.

பதிப்பு நூல்கள்

சிறந்த நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், இதழாசிரியராகவும், சித்தமருத்துவராகவும், சீர்திருத்தவாதியாகவும், அருள்ஞானியாயும் விளங்கிய இவர் சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த பேராளர்.

ஒழிவிலொடுக்கம் (1851), தொண்டைமண்டல சதகம் (1857), சின்மயதீ பிகை (1857) ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்து வெளியிட்டவர் ஆவார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:20:54(இந்திய நேரம்)