தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

பாகல்

மூலிகைச் செயற்பண்புக்கூறுகளும் மருத்துவப் பயன்களும்


முனைவர் வீ.இளங்கோ,
உதவிப்பேராசிரியர்,
சித்த மருத்துவத்துறை


தமிழ் மருத்துவத்தில் காரவல்லி, கூரம், கூலம் என்று பல பெயர்களில் கூறப்படும் பாகற்காய் தமிழகம் மற்றும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் உணவுப் பொருளாகப் பயன்படுவதுடன் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் பல வகையுண்டு. பாகல், காட்டுப்பாகல், நரிப்பாகல், நாய்ப்பாகல், வேலிப்பாகல், கொம்புப் பாகல், நிலப்பாகல் மற்றும் மிதிப்பாகல் ஆகியவையாகும். இவை அனைத்திற்கும் மருத்துவக் குணங்கள் ஒன்றே எனச் சித்த மருத்துவ நூல்கள் உரைக்கும். அகத்தியர் குணவாகடம் மற்றும் தேரையர் பாடல்களில் இதன் காய், இலை, விதை இவற்றின் மருத்துவப் பயன்கள் விளக்கப்படுகின்றன.

மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

பாகற்காயில் வளியேற்ற நிலையைக் குறைக்க வல்ல கரோட்டினாய்டுகளும் வைட்டமின் C, .E, A ஆகிய வையும் உள்ளன. கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்தனிமங்களும் பாகலின் மருத்துவப் பண்புகளைக் கூட்டும் செயற்பண்புகளாக அமைந்துள்ளன. எனினும் பாகலின் முக்கியக் குறியீட்டு மூலிகை வேதிமங்களாகவும் நீரிழிவு நோய் தீர்க்கும் மருத்துவச் செயற்பண்புக் கூறுகளாகவும், சரண்டின், பாலிபெப்டைடு P மற்றும் விசின் ஆகியவை உள்ளன. விதை, பழம் மற்றும் பாகல் இலைகளிலுள்ள சரண்டின் - ஒரு ஸ்டீராய்டு கிளைக்கோசைடு ஆகும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-P என்ற மூலிகை செயற்பண்புக்கூறை இன்சுலின்-P என்றே அழைக்கலாம். விதைகளில் உள்ள விசின் எனும் பிரிமிடின் நியூக்ளியேசைடு மூலக்கூறு, நோய் தீர்க்கும் மருத்துவச் செயற்பண்புக் கூறாக விளங்குகிறது. பாகற்காயிலிருந்து மேலும், குநர்பிட்டேன், மமோர்டிகோசைடு-K., L மற்றும் மமோர்டிசின் I மற்றும் II ஆகிய மூலிகைச் செயற்பண்புக் கூறுகள் மருத்துவப் பயன்கொண்டவைகளாக விளங்குகின்றன.

மருத்துவப் பயன்கள்

பாகல் இலைச்சாறு புழுக்கொல்லியாகவும், பாடாண விட முறிவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழம், வெள்ளை நோய், இருமல், இரைப்பு, மூலம், குட்டம் ஆகிய நோய்களுக்கு மருந்தாகக் கூறப்பட்டுள்ளது. கொம்புப் பாகல் அதிகம் உண்ணும்போது நல்ல மருந்துகளின் பலன்களையும் முறிப்பதால் அளவுடன் பயன்படுத்தல் வேண்டும். நாய்ப்பாகல் சாதிலிங்கம் மற்றும் பாடாண மருந்துகளைச் சுத்திசெய்யப் பயன்படுகிறது. இது பீநிசம் எனும் சுவாச நோயைக் குணப்படுத்துகிறது. மிதிப்பாகல் பாகரசம், அரிதாரம் மற்றும் இதர சித்த மருத்துவப் பாடாணங்களின் விடத்தை முறிக்கும். மாலைக்கண் நோய்க்கு மிளகுடன் சேர்த்து மருந்தாகப் பயன்படுகிறது. மண்ணீரல், கல்லீரல் நோய்களுக்கும் குடல் நோய்களுக்கும் மருந்தாகிறது. பாகல் பழம் இரத்த விருத்திக்கும், ஈரல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்தருகிறது. இலை, பழம் இரண்டும் குட்டம், காமாலை மற்றும் மூல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் காய் சமைத்துண்ண நீரிழிவு, மேக நோய்கள் குணமாகும். பாகல் இலையைப் புண்களுக்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

அறிவியல் ஆய்வுகள்

பல்வேறு உலகளாவிய ஆய்வகங்களில் நடைபெற்றுள்ள உயிர்வேதிம மருந்தியல் ஆய்வுகளில் பாகற்காய் மற்றும் இலைகளின் வடிச்சாறு மற்றும் மூலக் கூறுகள் குறிப்பாக சரண்டின் மற்றும் மமோர்டின் ஆகிய மூலக்கூறுகள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் நீரிழிவு நோயில் தோன்றும் இரத்த அதி சர்க்கரை, கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றைக் குறைக்கும் செயல்திறன் கொண்டுள்ளதெனக் கண்டறியப்பட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதய இரத்தக்குழாய் அடைப்பை ஏற்படுத்தும் நோய் நிலைகளிலும், நீரிழிவின் போது தோன்றும் புரதச் சிதைவைத் தடுக்கவும் பாலிபெப்டைடு-P மருந்தாகப் பயன்படுகிறது. இன்சுலின் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் சரண்டின் மருத்துவச் செயற்பண்புக் கூறாகப் பயன்படுகிறது. மேலும் அதிகப் பருமனுடைய நோயாளிகளின் எடைமற்றும் கொழுப்பினை இயல்பு நிலைக்குக் குறைக்கவும் பாகற்காயில் இருந்து பெறப்படும் மருத்துவச் செயற்பண்புக் கூறுகள் நல்ல மருந்தாகப் பயன்படுவதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இம்மூலிகை மூலக்கூறுகள் வாய்வழியாகவும், தோல்வழி ஊசி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:13:40(இந்திய நேரம்)