குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு

பாடல்
Poem


குடும்ப விளக்கு

தன்அருமை மக்கள்

தமிழ்க்கழகம் தாம்செல்லப்

பின்னரும் ஐயன்செல்லப்

பெண்ணரசி - முன்சுவரில்

 

மாட்டி இருந்த

மணிப்பொறி "இரண்டு என்று"

காட்டி இருந்ததுவும்

கண்டவளாய்த் - தீட்டிச்

 

சுடுவெயிலில் காயவைத்த

சோளம் துழவி

உடல்நிமிர்ந்தாள் கண்கள்

உவந்தாள் - நடைவீட்டைத்

 

தாண்டி வரும்விருந்தைத்

தான்கண்டாள் கைஏந்திப்

பூண்ட மகிழ்வால்

புகழ் ஏந்தி - வேண்டி

 

"வருக! அம்மா வருக!

ஐயா வருக!

வருக! பாப்பா தம்பி"

என்று - பெருகுஅன்பால்

 

பொன்துலங்கு மேனி

புதுமெருகு கொள்ள முகம்

அன்று அலர்ந்த செந்தா

மரையாக - நன்றே

 

வரவேற்றாள்; வந்தவரின்

பெட்டி படுக்கை

அருகில் அறைக்குள்

அமைத்தாள் - விரைவாக

 

அண்டாவின் மூடி

அகற்றிச் செம்பில் தண்ணீர்

மொண்டு புறந்தூய்மை

முடிப்பீர் என்று - விண்டபின்

 

சாய்ந்திருக்க நாற்காலி

தந்தும், வெண்தாழையினால்

வாய்ந்திருக்கும் பாய் விரித்தும்

மற்று அதிலே - ஏய்ந்திருக்க

 

வெள்ளைஉறை இட்டிருக்கும்

மெத்தை தலையணைகள்

உள்அறையில் ஓடி

எடுத்து உதவி - அள்ளியே

 

தேன்குழலும் உண்ணத்

தெவிட்டாத பண்ணியமும்

வான்குழலாள் கொண்டுவந்து

வைத்து ஏகி - ஆன்கறந்த

 

பாலும் பருகும்

படிவேண்டி, வெற்றிலைக்கு

நாலும் கலந்து

நறுக்கியகாய் - மேலும் இட்டுச்

 

செந்தாழை, பல்பூக்கள்

பச்சையொடு சேர்கண்ணி

வந்தாள் குழல்சூட்டி

மற்றவர்க்கும் - தந்துபின்

 

நின்ற கண்ணாடி

நெடும்பேழை தான் திறந்(து)

இன்று மலர்ந்த

இலக்கியங்கள் - தொன்றுவந்த

 

நன்னூல்கள் செய்தித்தாள்

நல்கி, "இதோ வந்தேன்"

என்று சமைக்கும்

எதிர் அறைக்குள் - சென்றவளை

 

வந்தோர்கள் கண்டு

மலர்வாய் இதழ்நடுங்க,

"எந்தாயே எந்தாயே

யாம் எல்லாம் - குந்தி

 

விலாப்புடைக்க வீட்டில் இந்த

வேளைஉணவு உண்டோம்

பலாப்பழம்போல் எம்வயிறு

பாரீர் - நிலாப்போலும்

 

இப்போதும் பண்ணியங்கள்

இட்டீர் அதையும் உண்டோம்

எப்போதுதான் அமைதி"

என்று உரைத்தார்

 

- பாரதிதாசன்