குடும்ப விளக்கு
பாடல் கருத்து
Theme of the Poem
அது ஒரு நல்ல குடும்பம். அக்குடும்பத்தில் அப்பா, அம்மா, பிள்ளைகள் கூடி வாழ்ந்தனர். 'அப்பா' - அக்குடும்பத்தின் தலைவன். 'அம்மா' - அக்குடும்பத்தின் தலைவி. இருவரும் சிறப்பாகக் குடும்பம் நடத்தி வந்தனர்.
அன்று ஒருநாள்; நண்பகல் (நடுப் பகல்) நேரம்; குடும்பத்தில் உள்ள எல்லாரும் உணவு சாப்பிட்டனர். அதன்பின் தலைவி தன் பிள்ளைகளைத் 'தமிழ்ப் பள்ளி’க்கூடத்திற்கு அனுப்பினாள். அங்குப் பிள்ளைகள் தமிழ்மொழியில் எல்லாப் பாடங்களையும் படித்தார்கள்.
தலைவன் தன் கடைக்குச் சென்றான். அங்கு அவன் நல்ல பொருள்களை விற்றான். நேரம் ஆனது. கடிகாரம் மணி இரண்டு என்று காட்டியது.
தலைவி வீட்டுக்கு வெளியே வந்தாள். வெயிலில் சோளம் என்ற உணவுப் பொருள் (தானியம்) காய்ந்து கொண்டு இருந்தது. அதனை அவள் கைகளால் மேலும் கீழுமாகப் பரப்பிக் காய வைத்தாள்.
அப்போது வீட்டின் முன்பகுதியில் யாரோ வருவது போல இருந்தது.
வீட்டிற்கு விருந்தினர் வந்தனர். அம்மா, ஐயா, பாப்பா, தம்பி நான்கு பேரும் ஊரில் இருந்து வந்தனர்.
தலைவி விருந்தினரைப் பார்த்ததும் மகிழ்வு கொண்டாள். அவளின் முகமும் மலர்ச்சி அடைந்தது.
"வருக அம்மா
வருக ஐயா
வருக பாப்பா
வருக தம்பி"
என்று மகிழ்வாக வரவேற்றாள். வந்தவர்கள் கொண்டு வந்த பெட்டிகள், பைகள், படுக்கை ஆகியவற்றை வாங்கி அறைக்குள் வைத்தாள்.
தலைவி தண்ணீரைச் செம்பில் எடுத்துத் தந்தாள். அவர்கள் தண்ணீரால் கால், கை, முகம், ஆகியவற்றைக் கழுவிக் கொண்டனர்.
அதன்பின் அவர்கள் அமர நாற்காலி தந்தாள்; வெள்ளை நிறத்தில் இருக்கும் தாழம்பூக்களால் செய்யப் பெற்ற பாயைத் தந்தாள். அதன்பின் மெத்தை தந்தாள். தலைக்கு வைத்துக் கொள்ளத் தலையணை தந்தாள்.
தலைவி அவர்கள் சாப்பிடத் தேன் போன்று சுவை தரும் தேன்குழல் முறுக்குத் தந்தாள். உண்ண உண்ண இன்பம் தரும் பணியாரங்கள் தந்தாள்.

தலைவி விருந்தினர் குடித்திட நல்ல பால் தந்தாள். போட்டுக் கொள்ள வெற்றிலை தந்தாள். வெற்றிலையுடன், பாக்கு, சுண்ணாம்பு முதலியனவும் தந்தாள்.
தலைவி தாழம்பூவுடன் பல பூக்கள் சேர்த்துக் கட்டிய மாலையைக் கொண்டு வந்தாள். வீட்டுக்கு வந்த அம்மாவின் தலையில் வைத்தாள்.
அதன்பின் தலைவி அங்கு இருந்த கண்ணாடி அலமாரியைத் (நெடும்பேழை) திறந்தாள். அதில் இருந்த பழைய நூல்களை எடுத்தாள். புதிய நூல்களை எடுத்தாள். செய்தித்தாள்களை எடுத்தாள். அவற்றை வந்தவர்களிடம் படிக்கத் தந்தாள்.
தலைவி "நீங்கள் படித்துக் கொண்டு இருங்கள்; இதோ வந்து விடுகிறேன்" என்று சொன்னாள். அதன்பின் அவள் சமையல் அறைக்குச் சென்றாள்.
வந்தவர்கள் தலைவியைப் பார்த்துப் பின்வருமாறு கூறினர்.
"அம்மா! அம்மா! நில்! உணவு ஏதும் எங்களுக்கு வேண்டாம்!
எங்கள் வீட்டில் உணவு சாப்பிட்டோம். எங்கள் வயிற்றைப் பார்! பலாப்பழம் போலப் பெரிதா இருக்கிறது.
உன் வீட்டில் முறுக்கு, பணியாரங்கள் உண்டோம். இனிமேல் எதுவும் சாப்பிட முடியாது. எப்போதுதான் இந்த வயிற்றுக்கு ஓய்வு தருவது.
வேண்டாம் எங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம், நீ சமையல் செய்யச் செல்ல வேண்டாம், எங்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டு இரு,"
இவ்வாறு தலைவி வீட்டுக்கு வந்த விருந்தினர்களை இன்பமாக வரவேற்றாள்.