தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

 • 3.0 பாட முன்னுரை

  தமிழ்க் காப்பிய இலக்கிய வரலாறு மிகத் தொன்மை வாய்ந்ததாகும். தமிழில் தோன்றிய முதற்காப்பியம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் ஆகும். அக்காப்பியம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை எண்ணற்ற காப்பியங்கள் கவிஞர்கள் பலரால் படைக்கப்பட்டுள்ளன. அக் காப்பியங்களுள் ஒன்று, புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்ட இராவண காவியம். இக்காப்பியம் 1946இல் வெளிவந்தது.

  இராவண காவியம் சில தனித்தன்மைகளைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. இராமாயணத்திற்கு எதிர்நிலைக் காப்பியமாக இராவண காவியம் திகழ்கிறது. இராமாயணத்தின் தலைமை மாந்தன் இராமன். இராவண காவியத்தின் காப்பியத் தலைவன் இராவணன். இராமாயணம் பக்தி உணர்ச்சியின் வெளிப்பாடு என்றால் இராவண காவியம் தன்மான இயக்க உணர்வின் வெளிப்பாடாகும். இராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் (Villain) இராவணன்; இராவண காவியத்தின் எதிர்நிலைத் தலைவன் இராமன். இராமாயணத்திற்கும் இராவண காவியத்திற்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்றாலும், இராமாயணம் படைக்கப்பட்ட காலம் முதல் இந்திய மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து அவர்களை இயக்கி வந்துள்ளது.

  இத்தகைய செய்திகளைக் கொண்டுள்ள இராவண காவியத்தைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

  இராவண காவியம் எதற்காக?

  இராவண காவியம் புலவர் குழந்தையால் எதற்காக எழுதப்பட்டது? வான்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் நாட்டில் வழங்கி வந்தபோது இராவண காவியம் ஏன் எழுதப்பட்டது என்பது ஓர் அடிப்படையான வினா ஆகும். மாணவர்களாகிய நீங்களும் இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டிய கடமை உண்டு.

  இந்தியத் துணைக் கண்டத்தில் மிகத் தொன்மையான குறிப்பிடத்தக்க நாகரிகங்கள் இரண்டு. ஒன்று திராவிட நாகரிகம், மற்றொன்று ஆரிய நாகரிகம். இந்த இரு நாகரிகங்களின் இணைப்புத்தான் இந்திய நாகரிகம் எனப்படும். மிகத்தொன்மையான காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுதும் திராவிட நாகரிகம் பரவியிருந்தது. அதன்பின்னர் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரிய நாகரிகம் நுழைந்தது. தொடக்கக் காலத்தில் இரு நாகரிகங்களுக்கு இடையில் இணக்கமான சூழ்நிலை இல்லை. ஆரிய நாகரிகம் சிந்துவெளி மற்றும் கங்கை வெளிப் பகுதியில் பரவியபோது திராவிட நாகரிகம் தென்னக அளவில் சுருங்கியது. இத்தகைய சூழலில், ஆரிய மேலாண்மை பெற்ற காலக் கட்டத்தில் வான்மீகியின் இராமாயணம் வடமொழியில் தோன்றியது.

  வான்மீகிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்த் தோன்றிய கம்பர் தமிழில் இராமாயணக் கதையைக் காப்பியமாகத் தந்தார். அவருக்கு முன்பே இராம காதை தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. ஆழ்வார்கள் திருமாலின் பெருமையைப் பாடினர். வான்மீகி இராமாயணமும் ஆழ்வார்களின் பாசுரங்களும் இராமன் திருமாலின் அவதாரம் எனக் கருதக் காரணங்கள் ஆயின. கம்ப இராமாயணம் தோன்றிய காலத்திலிருந்தே மக்களின் செல்வாக்கைப் பெற்றது. ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற பழமொழி கம்பரின் கவித்துவ ஆற்றலைப் புலப்படுத்தும். தேசியக் கவி பாரதியாரும் ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று கம்பரால் தமிழ்நாடு உயர்வு பெற்றதைப் பாராட்டினார். கம்பர் பெயரில் மன்றங்கள், கழகங்கள் தோன்றின. அவை கம்பர் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டன.

  சுயமரியாதை இயக்கச் சார்பாளரான புலவர் குழந்தை பகுத்தறிவுத் தந்தை பெரியாரிடத்தில் ஈடுபாடு உடையவர். திராவிடச் சிந்தனை மிக்கவர். ஆரிய இராமனைத் திராவிடர் எனும் இனவுணர்வின்றிப் போற்றுவதை ஏற்காதவர்; கடுமையாக எதிர்ப்பவர். இராமனின் பெருமை பேசும் இராமாயணத்தைப் போன்று இராவணனின் பெருமை பேசும் காப்பியம் ஒன்றைப் புனையக் கருதினார் புலவர் குழந்தை. எனவே, இராவணனைத் தன்னேரில்லாத் தலைவனாகவும் இராமனை எதிர்நிலைத் தலைவனாகவும் (Villain) கொண்டு இராவண காவியம் படைத்தார். அதன்வழி இராவணனின் பெருமை பேசப்பட்டது. இராமனின் தீயொழுக்கம் பேசப்பட்டது.

  நிகழ்ச்சி வேறுபாடு

  இராமன் மிதிலையில் வீதிவழிச் செல்லும்போது கன்னிமாடத்தில் இருந்த சீதையைக் கண்டு காதலுற்றதாகவும் அவ்வாறே சீதையும் இராமனைக் கண்டு காதலுற்றதாகவும் கம்பர் கூறுகிறார். இராவணனும் வண்டார்குழலியும் சோலையில் தனிமையில் கண்டு காதலுற்றதாக இராவண காவியம் பேசும். சூர்ப்பணகை திருமகளின் மந்திரத்தை உச்சரித்து அழகிய உருவம் பெற்றாள் என்றும் இராமனைத் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள் என்றும் கம்பர் கூறுவார். காமவல்லி இயல்பிலேயே நல்லழகி என்றும், அவளை இராமன் காம உணர்ச்சியால் கைப்பற்ற முயன்றான் என்றும், அவன் விருப்பத்திற்கு அவள் இணங்காமையால் இலக்குவனால் உருச்சிதைக்கப்பட்டாள் என்றும் இராவண காவியம் கூறும். சீதையை உருட்டியும் மிரட்டியும் அடைய வேண்டுமெனக் கம்பராமாயணத்தில் இராவணன் துடிக்க, இராவண காவியத்தில் இராவணன் அவளைத் தன் உடன்பிறப்பாகக் கருதிப் போற்றுகிறான். இவ்வாறு கம்ப இராமாயணத்திற்கும் இராவண காவியத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.

  பெயர் வேறுபாடு

  இராமாயணத்தில் வரும் காப்பிய மாந்தர்களின் பெயர்கள் இராவண காவியத்தில் மாற்றம் பெறுகின்றன.

  கம்ப இராமாயணம்

  இராவண காவியம்

  மண்டோதரி

  வண்டார்குழலி

  சூர்ப்பணகை

  காமவல்லி

  இந்திரசித்து

  சேயோன்

  விபீடணன்

  பீடணன்

  இவ்வாறு காவிய மாந்தரின் பெயர்களிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளதையும் காணலாம்.

  இராவண காவியம் பகுத்தறிவின் அடிப்படையில் படைக்கப்பட்ட காப்பியமாகும். இக்காப்பியம் தோன்றுவதற்கு முன் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கடவுள் புகழ் பாடும் காப்பியங்களாக, பக்தி நெறிப்பட்ட காப்பியங்களாக இருந்தன. போர்க்களத்தில் ஏவிய கணைகள் (அம்புகள்) மந்திரத் தன்மை உள்ளனவாகவும் மாயம் நிறைந்தவையாகவும் இருந்தன. இத்தன்மைகள் எவையும் இல்லாமல் இயல்பான நிகழ்வுகள் இக்காப்பியத்துள் இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 18:23:02(இந்திய நேரம்)