Primary tabs
-
2.4 கலை வளர்ச்சி
அக்காலத்தில் மன்னர்கள் கலைக்கு முக்கியத்துவம் அளித்துக் கலைகளை வளர்ச்சியுறச் செய்தனர். பல்லவர்களும், சோழர்களும் கலையார்வம் மிக்கவர்களாக இருந்து தமிழகத்தை ஒரு கலைக்கூடமாக மாற்றினர் என்பதில் எந்த ஒரு வியப்பும் இல்லை. இவைகளைப் பற்றி முன்புள்ள பாடங்களில் படித்தறிந்தோம். இங்கு நாம் 13ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை, நடனக்கலை, நாடகக்கலை, இசைக்கலை போன்றவற்றைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.
பாண்டியர் காலக் கோயில்களில் சிற்பியின் கைவண்ணத்தை எடுத்துக் கூறும் சிற்பங்கள் உள்ளன. திருக்கோலக்குடியில் அமைந்துள்ள கோயிலில் காணப்படும் புலஸ்திய முனிவரின் சிற்பம் சிறப்புடையதாகும். குன்னக்குடிக் கோயிலில் நிறுவப்பட்டுள்ள விஷ்ணுவின் சிற்பமும், எட்டுக் கைகளையுடைய நடராசரின் சிற்பமும் பாண்டியர் காலத்துச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.
பாண்டியப் பேரரசில் ஆட்சிபுரிந்து வந்த அரசர்கள் பக்திமார்க்கத்தைப் பின்பற்றி வந்தனர். இவர்களுடன் மக்களும் சமயப்பணி புரிந்து வந்தனர். இதன் விளைவாக இந்து சமயத்துடன் தொடர்புடைய நடனக்கலை வளர்ந்து வந்தது. கோயில் பணிக்கெனத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்ட தேவரடியார்கள் கோயில் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கோயில்களில் நடனமாடியும், இசை இசைத்தும் இக்கலையைப் போற்றிக் காத்தனர்.
திருப்பரங்குன்றத்துக் கோயிலில் காணப்படும் நடராசரின் சதுரத் தாண்டவத் திருக்கோலம் நடனக்கலை வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆடல்களில் சிறப்புற்று விளங்கிய மகளிருக்குத் தலைக்கோல் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் அரண்மனையில் நடனமாடி அரச குடும்பத்தை மகிழ்வித்தனர்.
கோயில்களிலும் பொது மேடைகளிலும் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. அழகிய பாண்டியன்கூடம் என்னும் நாடக அரங்கம் இருந்தது. நாடக நடிகர்களுக்கு நிலம் மானியமாக வழங்கப்பட்டது. சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என்னும் இருவகைக் கூத்துகள் நடைமுறையில் இருந்தன.
பல்லவர் காலத்தில் மேம்பாடு பெற்ற இசைக்கலை தொடர்ந்து பாண்டியர் காலத்திலும் சிறப்புப் பெற்றது. கோயில்களில் இசை இசைப்பதற்கெனத் திமிலை, மத்தளம், வீர மத்தளம், சேமக்கலம், திருச்சின்னம் முதலிய இசைக்கருவிகளை வைத்துப் பராமரித்தனர். திருமயம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகியவற்றில் இசைக்கருவிகள் கொண்ட சிற்பங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிய வேந்தர்களும் இசையில் ஈடுபாடு கொண்டு அதனைப் போற்றிக் காத்தனர்.