Primary tabs
-
2.3 பொருளாதார நிலை
நாட்டின் வளத்திற்குப் பொருளாதாரம் மிகவும் இன்றியமையாததாகிறது. அப்பொருளாதாரம் பெரும்பாலும் தொழில்கள் மூலமும், வாணிபத்தின் மூலமுமே பெறமுடிகிறது. அக்காலத்தில் வாணிபமும், முத்துக்குளித்தல் தொழிலும் மிகவும் புகழ் பெற்றிருந்தன.
பாண்டிய நாட்டு மக்கள் வாணிபத்தில் அதிக ஆர்வம் காட்டினர். ஆண்கள் பதினெட்டு வயதை அடைந்தவுடன் அவர்களது வசதிக்கு ஏற்பப் பெரிய தொழிலையோ அல்லது சிறிய தொழிலையோ தொடங்கினர். நாடு முழுவதும் பெரிய வாணிகர்களும், சிறிய வாணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உள்நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தோர் வாணிபக் கழகங்களை அமைத்திருந்தனர். இவை வாணிப வளர்ச்சிக்கு உதவின. வாணிபத்தை நடத்துவதற்குப் பாண்டிய நாட்டு மக்கள் பொன், கழஞ்சு, காணம் ஆகிய தங்க நாணயங்களைப் பயன்படுத்தினர். துலாம், பலம் என்னும் அளவைகள் பொன்னை நிறுத்தறியும் அளவைகளாக இருந்தன.
பழங்காலம் தொட்டுப் பாண்டியநாடு முத்திற்குப் புகழ்பெற்ற நாடாகும். பாண்டிய நாட்டில் கிடைக்கப்பெற்ற முத்து ஏற்றுமதியின் மூலமாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளம்பெற்றது. இச்செய்தியினை நாம் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
பாண்டிய அரசர்களான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட்ட நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. காசு, பணம் ஆகிய நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன.