தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பிற படையெடுப்புகள்

  • 3.2 பிற படையெடுப்புகள்

    அலாவுதீன் கில்ஜி கி.பி. 1316 இல் மரணமடைந்தான். இதனை அடுத்துத் தென் இந்தியாவில் படையெடுப்பை முடித்துவிட்டு டெல்லி சென்ற மாலிக்காபூர் அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தினான். அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்திற்குப் பெரும் தொல்லைகள் கொடுத்தான். ஆனால் மாலிக்காபூரும் வெகுவிரைவிலே கொல்லப்பட்டான்.

    3.2.1 குஸ்ருகான் படையெடுப்பு

    அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் டெல்லி அரியணையில் முபாரக்க்ஷா அமர்ந்தான். இவன் தனது படைத் தளபதி குஸ்ருகான் என்பவனைத் தென் இந்தியாவில் படையெடுப்பை நடத்துமாறு அனுப்பினான். முதற்கண் குஸ்ருகான் காகதீய மன்னன் திறை செலுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, காகதீய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டான்.

    காகதீயரை முறியடித்து, குஸ்ருகான் கி.பி. 1317இல் தமிழ் நாட்டில் படையுடன் முன்னேறினான். மதுரை மீது போர் தொடுத்தான். குஸ்ருகான் மதுரையில் போரைத் தொடங்கியபோது அங்குப் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே அவனால் வெற்றியைக் காணமுடியாமல் போயிற்று. ஆதலால் குஸ்ருகான் திரும்ப அழைக்கப்பெற்றான். குஸ்ருகானின் படையெடுப்பு, தமிழ் நாட்டு அரசியலில் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தாமல் முடிவுற்றது.

    3.2.2 உலூக்கான் படையெடுப்பு

    குஸ்ருகான் படையெடுப்புக்குப் பின்னர் டெல்லியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதோடு கில்ஜி சுல்தான்களின் ஆட்சியும் முடிவடைந்தது. அதற்குப் பின்னர் டெல்லியில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.

    டெல்லி அரசியலில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையும், மாற்றங்களையும் பயன்படுத்திக் கொண்டு வாராங்கலை ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் பிரதாபருத்திரன் தமிழ்நாட்டின் மீது குறிவைத்தான். பெரும்படையுடன் தமிழ்நாட்டிற்குள் புகுந்து முன்னேறினான். பாண்டியர் அவனை எதிர்த்துப் போரிட்டும் பயனில்லை. இரண்டாம் பிருதாபருத்திரன் வெற்றி பெற்றுக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

    இரண்டாம் பிரதாபருத்திரனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் டெல்லியை ஆண்டு வந்த கியாசுதீன் துக்ளக் தனது மகனும் வாரிசுமாகிய உலூக்கான் என்பவனைத் தென் இந்தியாவில் படையெடுப்புகளை நடத்துமாறு அனுப்பினான். இந்த உலூக்கானே முகமது பின் துக்ளக் ஆவான். டெல்லியின் உத்தரவுப்படி உலூக்கான் இரண்டாம் பிரதாபருத்திரனின் தலைநகரமான வாராங்கலைத் தாக்கினான். முதலில் உலூக்கான் தோல்வியைக் கண்டாலும், நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் வாராங்கலைத் தாக்கி வெற்றி கண்டு, அதனைத் தகர்த்தான்.

    இப்போரில் வெற்றியடைந்த காரணத்தால் உலூக்கான் படை தமிழ் நாட்டில் புகுந்து முன்னேறியது. பாண்டிய நாட்டு அரசன் பராக்கிரமபாண்டியனுக்கும் உலூக்கானுக்கும் போர் மூண்டது. இதில் வெற்றி கண்ட உலூக்கான் தமிழ்நாட்டை டெல்லி சுல்தானியர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    இசுலாமியர் படையெடுப்புக்கான காரணங்கள் இரண்டு கூறுக.
    2.
    அலாவுதீன் எந்த வம்சத்தைச் சார்ந்தவன்?
    3.
    அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?
    4.
    மாலிக்காபூர் எங்கு மசூதியைக் கட்டினான்?
    5.
    பாண்டிய நாட்டில் யார் யாருக்கிடையே வாரிசு உரிமைப் போர் நடைபெற்றது?
    6.
    அமீர்குஸ்ரு எழுதிய நூல் யாது?
    7.
    குஸ்ருகான் யார்?
    8.
    உலூக்கானின் வேறுபெயர் என்ன?
புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 13:26:33(இந்திய நேரம்)