தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- இசுலாமியர் ஆட்சியின் வீழ்ச்சி

  • 3.4 இசுலாமியர் ஆட்சியின் வீழ்ச்சி

    தமிழகம் இசுலாமியர் ஆட்சியின்கீழ் ஏறத்தாழ அரை நூற்றாண்டு இருந்து வந்தது. போசள மன்னன் வீரவல்லாளனின் மறைவு விசயநகரப் பேரரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. விசயநகர அரசன் முதலாம் புக்கன், பாதுகாவலனை இழந்த போசள நாட்டைக் கைப்பற்றித் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டான். இச்சமயத்தில் முதலாம் புக்கனின் மைந்தன் குமாரகம்பணன் தமிழ்நாட்டில் படை செலுத்தி வந்தான். வழியில் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த சம்புவராயர்களை வென்றான். அவன் மேலும் தெற்கு நோக்கி வந்து மதுரையில் போர் நடத்தி வாகை சூடினான். அத்தோடு மட்டுமன்றிக் கி.பி. 1362இல் அப்போது மதுரை சுல்தானாக இருந்த பக்ரூதின் முபாரக் ஷாவைப் பதவியிலிருந்து இறக்கினான். ஆயினும் மதுரையிலிருந்து இசுலாமியர் ஆட்சியை முற்றிலுமாக அவனால் அகற்ற முடியவில்லை. மதுரைப் பகுதியில் முபாரக்ஷாவின் வாரிசுகள் கி.பி. 1378 வரை ஆண்டனர். பின்பு விசயநகர அரசன் இரண்டாம் புக்கன் தென்னகத்திலிருந்து இசுலாமியர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கி.பி. 1378இல் மதுரையைத் தாக்கி அலாவுதீன் சிக்கந்தர்ஷா என்ற சுல்தானைத் தோற்கடித்தான். இத்துடன் மதுரை சுல்தானியரின் ஆட்சி முடிவுற்றது. தமிழ்நாடு விசயநகரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:37:47(இந்திய நேரம்)