தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- வரிவிதிப்பு முறைகள்

  • 5.4 வரிவிதிப்பு முறைகள்

    ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக விசயநகரப் பேரரசின் கீழ் இருந்து நாயக்கர்கள் ஆட்சி செய்து வந்தனர். எனவே அப்பேரரசின் தாக்கம் அவர்களின் வரிவிதிப்புகளிலும் இருந்தது என்பது மதுரை நாயக்கர்கள் ஆட்சி மூலம் தெரிய வருகிறது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் நில வரி, மனை வரி, உழவு வரி, பண்டார வாடை, ஜோடி, விராதா, தறிவரி, சுங்க வரி, பாசன வரி, ஏரி வரி, வத்தை வரி, காவல் வரி, உலை வரி, கடை வரி, தச்சு வரி, தேன் வரி, நெய் வரி, செக்கு வரி, மாட்டு வரி, வண்ணாரப் பாறை வரி, சரக்குக் கொள்முதல் வரி, விற்று முதல் வரி, பாசை வரி முதலிய வரிகள் இருந்தன.

    இவ்வரிகளை நில வரி (Land Tax), சொத்து வரி (Property Tax), வணிக வரி (Commercial Tax), தொழில் வரி (Professional Tax), கைத் தொழில் வரி (Tax on Industry), படைக்கொடை (Military Contribution), சமுதாய - குழு வரி (Social and Communal Taxes), பலவின வரிகள் (Other Taxes) என எட்டுப் பிரிவுகளில் அடக்கலாம்.

    5.4.1 நில வரி

    இவ்வரியே முக்கியமான வரி ஆகும். இதற்கு ஏற்ப நிலங்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அளக்கப்பட்டன. நிலங்கள் நன்செய், புன்செய் என பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிப்பு இருந்தது. நிலத்தின் தன்மையறிந்து வரி விதிக்கப்பட்டது. தோட்டப் பயிர்களுக்கும் வரி உண்டு.

    5.4.2 சொத்து வரி

    இது வீடு, மனை, தோப்பு முதலியவற்றிற்குப் போடப்பட்டது. கூரை வீடு, மாடி வீடு, சிறுவாசல் வீடு, பெருவாசல் வீடு என்று வீட்டு நிலைக்கேற்பவும் வரி விதிக்கப்பட்டது. குடியில்லாத வீடுகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆடு, மாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டது.

    5.4.3 வணிக வரி

    விறகு, வைக்கோல் இவற்றிற்கும் வரி இருந்தது. கடைகளுக்கும், சந்தைகளுக்கும் வரி போடப்பட்டது. விலைக் காணம், கைவிலைப் பணம் என்னும் தமிழ்ப் பெயர்கள் வணிக வரியைப் புலப்படுத்துகின்றன.

    5.4.4 தொழில் வரி

    தொழிலாளர் செலுத்தியது தொழில் வரி ஆகும். சாலியன், கருமான், தச்சன், கம்மாளன், குயவன், மயிர் வினைஞன், வண்ணான், வாணியன், கைக்கோளன், செம்படவன், ஆட்டிடையன் முதலியோர் வரி செலுத்தினர். நியாயத்தார் (Judges) மன்றாடி (Member of the Village council), வரி வாங்குபவர் (Tax Collector), கிராமத் தலைவர் போன்ற அலுவலர்களும் தொழில் வரி கட்டி இருக்கிறார்கள், உப்பு உண்டாக்குதல், கள் இறக்குதல் போன்றவற்றிற்கும் வரி இருந்தது.

    5.4.5 கைத்தொழில் வரி

    கைத்தொழில்களுக்கு விரி விதிக்கப்பட்டது. இவ்வரியைச் செலுத்தியவர்கள் முதலாளிகள். தொழில் வரியைச் செலுத்தியவர்கள் தொழிலாளர்கள். இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு. தறிக் கடமை, செக்குக் கடமை, அரிசிக் கடமை, பொன்வரி, புல்வரி, மரக்கல வரி, உலை வரி முதலிய சொற்கள் கைத்தொழில் வரியை நினைவுபடுத்துவன.

    5.4.6 படைக்கொடை

    படை நிருவாகச் செலவுக்காக வாங்கிய வரி இதுவாகும். நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைப் பணம் வாங்கியதாகச் சாசனம் ஒன்று கூறுகிறது.

    5.4.7 சமுதாய – குழுவரி

    வலங்கைச் சாதியினரிடமும், இடங்கைச் சாதியினரிடமும் ஒருவகை வரி வாங்கியதுண்டு கோயில் விழாவுக்கென்று தனிவரி வாங்கப்பட்டது. இது பிடாரி வரி எனப்பட்டது. (பிடாரி – காளி) திருமணக் காலத்தில் மணவீட்டார் வரி செலுத்தும் வழக்கம் இருந்தது.

    5.4.8 பல இன வரிகள்

    பாசன வரி, வத்தை வரி, கருணீக ஜோடி, தலையாரிக்கம், நாட்டுக்கணக்கு வரி, இராயச வர்த்தனை, அவசர வர்த்தனை, அதிகார வர்த்தனை, நிருபச் சம்பளம், ஆளுக்கு நீர்ப்பாட்டம், பாடி காவல் முதலிய வரிகள் இருந்தன.

    ஏரி, கண்மாய், குளம் இவற்றிலுள்ள மீன்களைப் பிடித்து விற்ற பணம் அரசாங்கத்தைச் சாரும். இது பாசைவரி எனப்பட்டது. ஆற்றைக் கடக்க வேண்டிய இடங்களில் வத்தை, படகு இவற்றைப் பயன்படுத்துவதற்கு வாங்கிய வரி வத்தை வரி ஆகும். கருணீக ஜோடி, தலையாரிக்கம், நாட்டுக்கணக்கு வரி, இராசய வர்த்தனை, அவசர வர்த்தனை, அதிகார வர்த்தனை ஆகியவை அரசாங்கக் கிராம அலுவலர் நிருவாகச் செலவுகளுக்காக வாங்கிய வரிகள் ஆகும். அரசாங்கக் கட்டளையைக் கொண்டு வருபவனுக்காக வாங்கிய வரி நிருபச் சம்பளம் ஆகும். அவரவர் வயல்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக வழி செய்ய வைத்திருந்த ஆளுக்காக வாங்கப்பட்ட வரி நீர்ப் பாட்டம் என்பது. ஊர் காவலுக்காக உள்ள நிருவாகச் செலவுக்காக வாங்கிய வரி பாடிகாவல் என்பது. தரை வழிச் சுங்க வரி வாங்கப்பட்டது. கடல் வழிச் சுங்க வரி மதுரை நாயக்கர் ஆட்சியில் சிறிய அளவிலேயே இருந்தது.

    கடமை, மகமை, காணிக்கை, கட்டணம், வரி, இறை, கட்டாயம் என்னும் சொற்கள் நாயக்கர் காலத்தில் வரியைக் குறிக்க வழங்கின.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:40:39(இந்திய நேரம்)