தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03142- ஆங்கிலேயர் ஆட்சிப் பரப்பு


  • 2.1 ஆங்கிலேயர் ஆட்சிப் பரப்பு

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரையிலும், சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரையிலும் விரிவடைந்திருந்தது. வெல்லெஸ்லி பிரபுவின் காலத்தில் டில்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத், கருநாடகம், சூரத், தஞ்சாவூர் ஆகிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் உடைமையாகிவிட்டன. தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, வெல்லெஸ்லி பிரபுவுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு, தான் வாழ்ந்து வந்த தஞ்சாவூர்க் கோட்டை ஒன்றைத் தவிரத் தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்துவிட்டார்.

    கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசாங்க நிருவாகத்தையும், அன்றைய நடைமுறைகளையும் கட்டுப்படுத்தி ஓர் ஒழுங்குமுறையில் அமைக்கும் பொருட்டுப் பிரிட்டிஷ் பாராளுமன்றமானது கி.பி. 1773ஆம் ஆண்டிலும், கி.பி.1781ஆம் ஆண்டிலும் இந்திய அரசாங்கச் சீர்திருத்தச் சட்டங்களை இயற்றியது. அப்போது இந்தியாவில் வாரன்ஹேஸ்டிங்ஸ் என்பவர் கவர்னல் ஜெனரலாக இருந்தார். சென்னை அரசாங்கம் கவர்னர் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டது. பெண்டிங்க் பிரபு கி.பி. 1803-1807 இல் சென்னை அரசாங்கக் கவர்னராக இருந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:11:20(இந்திய நேரம்)