தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03142- நீதித்துறை


  • 2.4 நீதித்துறை

    சென்னையில் கி.பி. 1801ஆம் ஆண்டு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கி.பி. 1813ஆம் ஆண்டு மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்குக் குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. கலெக்டர்களும் நிலம், நிலவரி முதலிய வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லி வந்தனர். எனினும் நீதி வழங்குதுறையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. எனவே மெக்காலே பிரபு என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இந்தியா முழுவதற்கும் ஒரே சட்டம் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அறிக்கை அளித்தார்கள். அதன்படி அரசாங்கம் இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் (Indian Civil Procedure of 1859) , இந்தியக் குற்றச் சட்டம் (Indian Penal Code of 1860) இவற்றை இயற்றியது. இவற்றைத் தொடர்ந்து கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் குற்ற விசாரணை ஒழுங்குமுறைச் சட்டம் (Indian Criminal Procedure Code) ஒன்றும், இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஒன்றும் இயற்றப்பட்டன. இச்சட்டங்களால் இந்திய ஒருமைப்பாடு உருவாயிற்று. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்திய மண்ணில் எந்த இந்தியனுக்கும், அவன் இன்ன குலத்தினன், இன்ன சமயத்தினன், இன்ன இடத்தினன், இன்ன நிறத்தினன் என்ற காரணத்தாலேயே அரசின் கீழ்ப் பணிபுரியும் உரிமை மறுக்கப்படலாகாது என்ற விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் (கி.பி.1861) ஒன்றின்படி சென்னையில் உயர்நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:14:23(இந்திய நேரம்)